காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் உள்ளது. இங்கு கேரளா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
அண்மையில் கேரளா சென்று விடுதிக்கு திரும்பிய மாணவர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் தோற்று உறுதி செய்யப்பட்ட 2 மாணவர்களும் தண்டலம் தனியார் மருத்துவமனையிலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுடன் தொடர்பில் இருந்த 235 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் மையத்தில் பயிலும் 21 மாணவிகளுக்கும், 8 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் தோற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் எனவும், மேலும் பாதிப்படைந்த மாணவர்களின் மாதிரிகளில், ஓமிக்ரோன் வகை தொற்று, இருக்கிறதா என்று குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் ராதாகிருஷ்ணன்
இம்மாணவர்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் , நேற்று நேரில் சந்தித்து மாணவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஓர் ஆண்டில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு தற்போது உள்ள உருமாறிய வைரஸ் நோய்களுக்கு பாதிப்பு பெரிய அளவில் இருக்காது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில மற்றும் பிற மாவட்ட மாணவர்கள் என்பதும் குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே நாம் கடைபிடித்து வந்த முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி, கூட்டங்களை தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர்ச்சியாக கடைபிடித்தால் ஆரோக்கியமான உடல் நலம் காக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் பொதுமக்கள் லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பிரியா ராஜ், இளைஞர் மேம்பாட்டு மைய நிர்வாகி மற்றும் வட்டார மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்