2022ம் ஆண்டு ஜூன் மத்தியில் இருந்து பிற்பகுதியில் கொரோனா நான்காவது அலையை இந்தியா காணக்கூடும், மேலும் இந்த அலை சுமார் 4 மாதங்களுக்கு தொடரும் என்று ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகளின் குழுவின் சமீபத்திய ஆய்வு கூறியுள்ளது. எவ்வாறாயினும், இது நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் நிலைமையைப் பொறுத்து தீவிரத்தன்மை மாறுபடும் எனக் கூறப்பட்டுள்ளது.


ஐஐடி கான்பூரின் கணிதத் துறையின் சபரா பர்ஷத் ராஜேஷ்பாய், சுப்ரா சங்கர் தர் மற்றும் ஷலப் ஆகியோர் ஜிம்பாப்வேயில் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.இந்த ஆய்வு வெளியிடப்பட்டாலும் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா 4வது அலை...எப்போது?
இந்தியாவில் கொரோனா நான்காவது அலை, கொரோனாவுக்கான முதல் தரவு கிடைத்த தேதியிலிருந்து, அதாவது ஜனவரி 30, 2020ல் இருந்து 936 நாட்களுக்குப் பிறகு உண்டாகும் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுவதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


"எனவே, நான்காவது அலை ஜூன் 22, 2022ல் தொடங்கி, ஆகஸ்ட் 23, 2022ல் அதன் உச்சத்தை அடைந்து, அக்டோபர் 24, 2022 ல் முடிவடைகிறது" என்று அவர்கள் கூறினார்கள், மேலும் தேதியைப் பொறுத்தவரை 99 சதவிகிதம் நம்பகத்தன்மையானது என்றும் அலை உச்சமடைவது ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31க்குள் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


4வது கொரோனா  அலை எவ்வளவு கடுமையாக இருக்கும்?
இந்த வைரஸின் புதிய அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு எப்போதும் உண்டு. தாக்கத்தின் தீவிரம் தொற்று, இறப்பு போன்ற பல்வேறு கூறுகளைப் பொறுத்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக, ஒமிக்ரான் பிஏ.2 திரிபு இந்தியாவில் புதிய அலையை ஏற்படுத்துமா என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து ஐஎம்ஏ கோவிட் பணிக்குழு துணைத் தலைவர் அண்மையில் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ஐஎம்ஏ கோவிட் பணிக்குழு துணைத் தலைவரும் மருத்துவருமான ராஜீவ் ஜெயதேவன் பேசியதாவது:


"நாடு முழுவதும் ஒமிக்ரான் பிஏ.2 தொற்று அதிகரித்து வரும் நிலையில், மூன்றாம் அலையைத் தோற்றுவித்தது. அது குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை. பிஏ.2 தொற்று, பிஏ.1 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் தாக்காது. இது புதிய வைரஸோ அல்லது திரிபோ அல்ல.



இது ஒமிக்ரான் வைரஸின் துணை பரம்பரை ஆகும். பிஏ.1, பிஏ.2, பிஏ.3 என 3 வகைமைகள் இதில் மொத்தம் உள்ளன.


எனினும் பிஏ.2 தொற்று பிஏ.1 தொற்றைக் காட்டிலும் அதிவேகத்துடன் பரவும். அந்த வகையில்தான் பிஏ.2 பிறழ்வு நிலையை அடைந்துள்ளது. இதன்மூலம் இன்னும் அதிக மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் வழக்கமாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் தடுப்பூசியால் பெற்ற எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும்.  


வைரஸ் திரிபுகளால் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக மிஞ்ச முடியும். இது ஒமிக்ரான் வைரஸிலேயே தெரிந்துவிட்டது. இந்தப் போக்கு புதுப்புது வைரஸ் திரிபுகளால் வருங்காலத்திலும் தொடரும் எனத் துணைத்தலைவர் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.