மூன்றாவது அலையாக கொரோனா வேகமெடுத்தாலும் அதனை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.


"கொரோனா இரண்டாவது அலையிலிருந்து இந்தியா விடுபட்டுவருகிறது. ஆனால், மக்கள் மறுபடியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தவறவிடுகின்றனர். மாஸ்க், சோஷியல் டிஸ்டன்சிங் மீண்டும் மறக்கப்படுகிறது. இப்படியே சென்றால், இன்னும் 6 முதல் 8 வாரங்களில் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது.."2 என்று டெல்லி எய்மஸ் மருத்துவமனை இயக்குநர் ரஞ்சித் குலேரியா எச்சரித்திருக்கிறார். இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜரானார். அவர் வாதிடும்போது, "ஒருவேளை கொரோனா மூன்றாவது அலை ஏற்படின் அதை சமாளிக்க 66,000 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. 


ஜூன் 17ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.12 கோடி பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில், 86,01,926 பேர் 45 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோர். 26,86,722 பேர் 18 முதல் 44 வயது கொண்டோர். கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு 84 நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள முன்னுரிமை வழங்கப்படுகிறது.


அதேபோல், வெளிநாடு செல்வோர், கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு, விளையாட்டு வீரர்கள்ளுக்கு, ஒலிம்பிக்ஸில் பங்கேற்கவுள்ளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த முன்னுரிமை வசதியை ஆகஸ்டு 31 வரை செயல்படுத்தவுள்ளது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்காக பிரத்யேகமாக தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்துகிறது. குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அரசு மேற்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.


இதற்கிடையில், நாடு முழுவதும், பிரதமரின் புதிய கொரோனா தடுப்பூசித் திட்டம் நேற்று செயல்படத் தொடங்கியநிலையில் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3.9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகம் முழுவது 7,427 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 24,29,924. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,37,209. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,29,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.