புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் 21-வது வாராந்திர கொரோன மேலாண்மை சீராய்வு கூட்டம் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், காவல்துறை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா மற்றும் பல்வேறுத்துறை செயலர்கள், குழந்தைகள் நலத் தலைமை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  


சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் புதுச்சேரியில் கொரோன  நிலவரம், மூன்றாவது அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கருப்புப் பூஞ்சை நோய், தடுப்பூசி, வண்ண சுவர் ஓவியங்களுடன் புதிதாக தயார் செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு ஆகியவை குறித்து படக்காட்சிகள் மூலம் விளக்கினார்.




ஜிப்மர் குழந்தை நல மருத்துவர் குழந்தைகளில் கொரோன  பாதிப்பு குறித்த தகவல்களை படக்கட்சிகள் மூலம் விவரித்தார். மேலும் கூட்டத்தில் குழந்தைகளை பாதிப்பில் இருந்து தடுப்பது, பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


தொடர்ந்து ஆளுநர் தமிழிசை பேசியதாவது, ‘‘புதுச்சேரியில், இறப்பு விகிதம் மிகவும் குறைந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வண்ண சுவர் ஓவியங்களுடன் தயார் செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குறியது. அந்த முயச்சிகளுக்காக சுகாதாரத்துறையைப் பாராட்டுகிறேன்.


கொரோன நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்புக்கு பிறகே பள்ளி கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிச் செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.




முதல் தவணை தடுப்பூசிப் போட்டுக் கொண்டால் பெருமளவு நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும். அதனால் தகுதியுடைய அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசிச் செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இணைநோய் உள்ளவர்கள், முதியவரகள், விடுபட்ட முன்களப் பணியாளர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிச் செலுத்துவதில் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும்.


 




மூன்றாவது அலையை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும். மூன்றாவது அலையை எதிர்கொள்ளவதற்கான அடிப்படைத் தயாரிப்புகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி இலக்கை அடைய கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். புதிய தொற்றுகள் குறித்தும் நாம் கவனமாகவும், முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும்.


வாராந்திர கொரோன  மேலாண்மைக் கூட்டம் திட்டங்கள் வகுப்பதற்கும். நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குமான ஆலோசனைகள் பெற உதவியாக இருக்கிறது.’’இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.


Plus 2 | தொடங்கியது 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்.. இதுதான் விவரம்