பஞ்சாப்பின் சிரோமணி அகாலிதல் கட்சியின் தலைவரும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து அவர் தயானந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன் கிழமை அன்று மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான பிரகாஷ் சிங் பாதல் சளி மற்றும் இருமல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கட்சித் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கியுள்ளனர். 






நேற்றைய நிலவரப்படி 2,58,089 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 6.02 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவரை, மொத்தம் 8,209 ஒமிக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மறுபுறம், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, இந்த எண்ணிக்கை 16,56,341ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,05,964 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர்: நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3.5 கோடியை (3,52,37,461) கடந்தது. குணமடைந்தோர் வீதம் 94.27 சதவீதத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,51,740 பேர் கொரோனா தொற்றில் இருந்து குனமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 3,490 பேர் குறைந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு: கொரோனா பாதிப்பால் நாட்டில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் 385 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை (4,86,451) நெருங்குகிறது. மறுபுறம், ஒமிக்ரான் தொற்று முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்ரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒமிக்கிரான் ரக தொற்று பரவலை சாதாரண ஜலதோஷத்தைப் போன்று கருதக்கூடாது என்று, நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் முன்னதாக எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உச்சக்கட்ட பாதிப்பு: மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில், சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா அலை தனது உச்சக்கட்ட பாதிப்பை அடைந்தது. மும்பையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.