தேசிய சுகாதார இயக்கத்தின் மருத்துவ மேலாண்மை தரவு அமைப்பு முறையின் அடிப்படையில் கொவிட்-19 தொற்றினால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவில் பதிவு அமைப்பு முறையையும், மருத்துவ மேலாண்மை தரவு அமைப்பு முறையையும் ஒப்பிட்டு இதுபோன்ற தவறான தகவல்களை அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊகத்தின் அடிப்படையிலும் எந்தவிதமான அடிப்படை ஆதாரங்கள் இல்லாமலும் இது போன்ற செய்திகள் வெளிவந்துள்ளன என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. எனவே, சிவில் பதிவு அமைப்பில் (Civil Registration System) பதிவு செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை வைத்து கொரோனா தொற்றினால் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை நிபுணர்கள் ஆய்ந்து வருகின்றனர்.
ஊடகவியலாளர் எஸ்.ருக்மினி, சென்னை மாநகராட்சி சிவில் பதிவில் உள்ள இறப்பு எண்ணிக்கை தரவுகள் அடிப்படையில், 2015- 2019 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சராசரி இறப்பு எண்ணிக்கையை விட 2020ல் மட்டும் 12,000 கூடுதல் உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பத்தை கண்டறிந்தார். அதாவது, 2020ல் சென்னையின் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கையை இது மூன்று மடங்கு அதிகரித்து இருந்தது. கொரோனா பெருந்தொற்று காலங்களில் வழக்கத்தை விட கூடுதல் உயிரிழப்புகள் எற்பட்டுள்ளன. ஆனால், அவை கொரோனா இறப்பு எண்ணிக்கையாக காட்டப்படுவதில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கூடுதல் இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதை ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் கண்டறிந்துள்ளனர்.
சிவில் பதிவு அமைப்பைத் தாண்டி, தேசிய சுகாதார இயக்கத்தின் மருத்துவ மேலாண்மை தரவு அமைப்பு முறையின் மூலமும் இந்தியாவின் கூடுதல் இறப்பு எண்ணிக்கையை ஆய்வாளர்கள் கணக்க்கிட்டு வருகின்றனர்.
பெரும்பாலும், ஊரக பொது சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார நிலையங்கள், துணை மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் என நாடு முழுவதும் உள்ள சுமார் 200,000க்கும் அதிகமான சுகாதார மையங்களில் இருந்து தரவை ஒருங்கிணைக்கும் போர்ட்டலாக மருத்துவ மேலாண்மை தரவு அமைப்பு செயல்படுகிறது. இந்தியா ஸ்பெண்ட் நாளிதழில் கடந்த ஜூலை 9ம் தேதி 'Deaths By 'Unknown Causes' On National Health Mission Portal 2X Official Covid Toll' என்ற ஆய்வுக் கட்டுரை வெளியானது.
மருத்துவ மேலாண்மை தரவுகள் அடிப்படையில், 2021 மே மாதம் நாடு முழுவதும் பதிவான இறப்பு எண்ணிக்கை, கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 175% அதிகம் என்றும் 2019 மே மாதத்துடன் ஒப்பிடும் போது 150% அதிகம் என்று ஆசிரியர் கூறியிருந்தார். மேலும், 2021ல் பதிவு செய்யப்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 250,000-க்கும் எண்ணிக்கை "அறியப்படாத காரணங்கள்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசு விளக்கம்:
கோவிட்-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அதில், "மருத்துவ மேலாண்மை தரவு அமைப்பு முறையில் குறிப்பிடப்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, “இதர தகவல்கள் இல்லாதபட்சத்தில் இந்த உயிரிழப்புகள் அனைத்தும் கொவிட்- 19 தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகளாகக் கருதப்பட வேண்டும்”, என்று ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காரணம் அறியப்படாமல் சுமார் 2,50,000 உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக' இதுபோன்ற ஊடகச் செய்திகளே தெரிவிக்கின்றன. பட்டறிவு சார்ந்த தரவுகளின் அடிப்படையில் அல்லாமல், அடிப்படை ஆதாரமின்றி எந்த ஒரு உயிரிழப்பிற்கும் கோவிட்-19 தொற்றைக் காரணப்படுத்துவது தவறானது மற்றும் இதுபோன்ற அனுமானங்கள் கற்பனையின் உருவகங்கள் மட்டுமே.
கொவிட் தரவு மேலாண்மையில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மை வாயிலான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதுடன், தொற்றினால் நிகழும் உயிரிழப்புகள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட அமைப்புமுறையில் சம்பந்தப்பட்ட தரவுகளை தொடர்ச்சியாக புதுப்பிக்கும் பொறுப்பு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகளைப் பதிவு செய்வதில் ஏற்படும் முரண்களை தடுப்பதற்காக, உயிரிழப்புக்களை பதிவு செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான எண்ணிக்கை பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக ‘இந்தியாவில் கோவிட் -19 தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறையை' இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உயிரிழப்பு குறித்த சரியான தகவல்களைப் பதிவு செய்யுமாறு பல்வேறு கலந்துரையாடல்கள், காணொலிக் காட்சி மாநாடுகள் மற்றும் மத்திய குழுக்களின் மூலம் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை தினசரி பதிவு செய்யுமாறும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது" எனத் தெரிவித்தது.