மும்பையில்  BA.4,  BA.5 ஓமிக்ரான் திரிபு வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவிட் தொற்றாளர்களிடம் பெறப்பட்ட ரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மாதிரிகளில் 3 பேருக்கு BA.4 திரிபு, ஒருவருக்கு BA.5 திரிபும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மூன்றாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா:


கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8000க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஒட்டுமொத்தமாக புதிதாக 8.084 பேருக்கு தொற்று உறுதியானது. நாட்டில் தற்போது ஒட்டுமொத்தமாக 47,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்தனர்.






நிபுணர்கள் கருத்து:


இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இதனை நாம் 4 ஆம் அலையின் ஆரம்பம் என நினைக்கத் தேவையில்லை. மாறாக இதனை நாம் ஏற்கெனவே எதிர்பார்த்தது போலான ஏற்றமே இது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலையில் இருந்து என்டெமிக் எனப்படும் உள்ளூர் தொற்றாக மாறும்போது இதுபோன்ற சிறிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கமே.


பயணங்கள், சமூக நிகழ்வுகள், பொருளாதார செயல்பாடுகள் என அனைத்துமே பழைய நிலையில் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில் தொற்று பரவும் அபாயமும் சற்று அதிகமாகத் தான் இருக்கும்.


ஒரே நாளில் 1803 பேருக்கு தொற்று:


மும்பையில் ஒரே நாளில் 1803 பேருக்கு தொற்று உறுதியானது. முந்தைய நாளில் 1745 பேருக்கு தொற்று இருந்தது. ஜூன் 2 முதல் ஜூன் 11 வரையிலான காலகட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் மும்பையில் 0.134 சதவீதம் அதிகரித்துள்ளது. மே மாத மத்தியில் இருந்த தொற்று எண்ணிக்கையை ஒப்பிடும்போது ஜூன் மத்தியில் கொரோனா தொற்று 950 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில் ஜூன் 12ல் 100 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதியாயினர். கடந்த 4 மாதங்களுக்குப் பின்னர் மும்பையில் ஒரே நாளில் 100 பேர் மருத்துவமனையில் அனுமதியாகி உள்ளனர் என்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. மும்பையில் கொரோனாவால் உயிரிழந்த இருவருமே இணை நோய்கள் கொண்டவர்கள் எனத் தெரிகிறது.