பிரேசிலின் அமேசான் காடுகளில், கொரோனா தடுப்பூசிக்காக தன் தந்தையை முதுகில் சுமந்த படி ஓர் இளைஞர் நடக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. கொரோனா தடுப்பூசியை அணுகுவதில் உள்ள பிரச்னைகளை உலகத்துக்கு வெளிப்படுத்தும் ஒரு குறியீடாக மாறியுள்ளது அப்படம். இருவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, மருத்துவர் எடுத்த புகைப்படம்தான் அது. 24 வயதான தாவி, 67 வயதான தன் தந்தை வாஹூவை சுமந்திருப்பது போல் உள்ளது. தடுப்பூசி செலுத்தும் இடத்தை சென்று அடைய, இந்த பழங்குடியின மக்கள் காட்டுக்குள் பல மணி நேரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கிட்டத்தட்ட 6 மணிநேரம் அவரது கிராமத்தில் இருந்து தனது நடக்கமுடியாத தந்தயை தாவி தூக்கி சுமந்து வந்திருக்கிறார். தாவி மற்றும் வாஹு, 'சோ' என்கிற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வினத்தில் 325 பேர், பரா மாகாணத்தில் 12 லட்சம் கால்பந்தாட்ட களத்தின் அளவுள்ள நிலப்பரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். வாஹுவுக்கு (தந்தை) நாள்பட்ட சிறுநீர் குழாய் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் இருப்பதால் சிரமப்பட்டு நடந்ததாகவும், அவருடைய பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அப்படத்தை எடுத்த எரிக் ஜென்னிங்ஸ் சிமோஸ் என்கிற மருத்துவர் கூறினார். அவரது மகன் தாவி, அவரை சுமார் 5 - 6 மணி நேரம் தன் முதுகில் சுமந்து வந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
"அது அவர்கள் மத்தியில் இருந்த அன்பின் வெளிப்பாடு, இவ்வளவு தூரம் தூக்கி வந்து தன் தந்தையை கொரோனாவில் இருந்து காப்பாற்றலாம் என்ற நம்பிக்கை" என மருத்துவர் சிமோஸ் கூறியிருந்தார். இந்தப் படம் கடந்த ஜனவரி 2021-ல், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பிரசாரம் பிரேசிலில் தொடங்கப்பட்ட போது எடுக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் பிரேசிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டாக்டர் எரிக் ஜென்னிங்ஸ் அப்படத்தை கடந்த ஜனவரி 1ஆம் தேதிதான் இன்ஸ்டாகிராம் தளத்தில், ஆண்டின் தொடக்கத்தில் நேர்மறை செய்தியைப் பரப்பும் நோக்கில் பகிர்ந்தார்.
பிரேசில் நாட்டில் 853 பழங்குடி மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துவிட்டதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின்றன. ஆனால் பழங்குடி மக்கள் உரிமைகள் குழுக்களோ, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். மார்ச் 2020 முதல் மார்ச் 2021 காலகட்டத்தில் மட்டும் 1,000 பழங்குடி மக்களுக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என, அபிப் என்கிற பிரேசில் நாட்டைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.
பிரேசிலின் கொரோனா தடுப்பூசி பிரசாரம் தொடங்கப்பட்ட போது, பழங்குடி மக்கள் முன்னுரிமை குழுக்களில் ஒன்றாகக் கருதப்பட்டனர். 'சோ' இனக் குழுவுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் இருந்தவர்கள் ஒரு சவாலை எதிர்கொண்டனர். அவர்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்வது சாத்தியமற்ற ஒன்று எனவும், அவர்கள் அத்தனை அதிக தொலைவில் பரவி இருப்பதால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு வாரக் கணக்காகும் என்றும் கருதினர். எனவே, காட்டுக்குள் குடிசைகளை அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர். 'சோ' இன மக்களின் கலாசாரம் மற்றும் அறிவை மதிக்கும் வகையிலான நடைமுறைகளை நாங்கள் பின்பற்றினோம்" என்று கூறினார் மருத்துவர் சிமோஸ்.
கடந்த செப்டம்பர் மாதம் வாஹு இறந்துவிட்டார். அவர் இறப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. தாவி தன் குடும்பத்தோடு இருக்கிறார், சமீபத்தில் தன் மூன்றாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டார். இந்த புகைப்படம் தடுப்பூசியை இவ்வளவு அருகில் கொண்டு வந்து தந்தும் விருப்பமின்றி திணிக்கவேண்டாம் என்று இணையத்தில் போராடும் அனைவரையும் ஊசியாய் குத்துகிறது. பல்வேறு நாடுகளில், பல கிராமங்களில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை காட்டுகிறது.