இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் வண்ணம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி வரும் 3ஆம் தேதி முதல் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.


வேக்சின் பெற தகுதி உள்ள சிறார்கள் Cowin தளத்தில் முன் பதிவு செய்யலாம் என்று அதன் தலைவர் டாக்டர் ஆர்எஸ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டத் தொடங்கியது.


இந்நிலையில் 15 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு https://www.cowin.gov.in/ என்ற இணையதளத்தில் நேற்று (ஜனவரி 1) தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முன்பதிவு நேற்று காலை தொடங்கியுள்ளது. அதில் சிறார்கள் தங்களது பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கோவின் வலைதளத்தில் பதிவு செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.



நாளை தேசிய அளவில் பல இடங்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. ஓமிக்ரான் பரவலுக்கு இடையே சிறார்களுக்கு வேக்சின் செலுத்துவது முக்கியமான தேவையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேசிய அளவில் சிறார்களுக்கு வேக்சின் போடப்படும் அதே நாளில் தமிழ்நாட்டிலும் வேக்சின் போடப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். அதன்படியே நாளை தமிழ்நாட்டில் சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகள் தொடங்குகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அளித்துள்ள விளக்கத்தின்படி, தமிழ்நாட்டில் சிறார்களுக்கு வேக்சின் நாளை காலை முதல் போடப்படும். இதற்காக நேரடியாக வந்து ஆன் சைட்டில் பதிவு செய்து வேக்சின் போடலாம். அல்லது கோவின் செயலியில் அருகில் இருக்கும் வேக்சின் முகாமை கண்டறிந்து அதில் முன் பதிவு செய்தும் கூட வேக்சின் போட்டுக்கொள்ள முடியும்.


https://www.cowin.gov.in/ தளத்தில் இதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும். வயதானவர்கால் எப்படி ரிஜிஸ்டர் செய்தனரோ அதேபோல் செய்தால் போதும். அப்பா, அம்மாவின் போன் எண் கொடுத்து ஓடிபி மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஆனால் அதே சமயம் பலரிடம் ஆதார் இருக்காது. 18 வயது குறைவானவர்கள் என்பதால் வேறு அடையாள அட்டை இருக்காது. எனவே இவர்கள் பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதும். இதில் அவர்களின் பெயர்கள் மற்றும் 15-18 வயது கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் விவரம் இருக்க வேண்டும். 15-18 வயது கொண்டவர்களுக்கு இந்தியாவில் கோவாக்சின், சைட்ஸ் கேடில்ல்லா நீடில் இல்லாத வேக்சின் இரண்டும் வழங்கப்படுகிறது. அதே சமயம் சிறார்களுக்கு என்ன வேக்சின் போடலாம் என்பதை பெற்றோரே தேர்வு செய்ய முடியும்.



தமிழகத்தில் பள்ளிகளிலேயே தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதால், பள்ளிகளே இதற்கான வேலைகளை கவனிக்கிறது. 2007ற்கு முன் பிறந்தவர்கள் இதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 33.46 லட்சம் பேர் தமிழகத்தில் தகுதியானவர்கள் என கூறப்படும் நிலையில், அவர்கள் அனைவருக்கும் வரும் 3ம் தேதி தொடங்கி அடுத்த 6 நாட்களுக்குள், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிறார்களுக்கு வேக்சின் போடுவதன் மூலம் அவர்கள் விரைவில் பள்ளிகளுக்கு திரும்ப முடியும்.


முதல் கட்டமாக கோவாக்சின் போடப்படும். பின்னர் போதுமான விநியோகம் கிடைத்தபின் சைடஸ் கேடில்லா வேக்சின் போடப்படலாம் என்று சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை சென்னை அடுத்த போரூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதேபோன்று மற்ற மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளை வைத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க துணை சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதார இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஆசிரியர் ஒருவரை, சிறப்பு அதிகாரியாக, தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்த, பள்ளிகளில் போதிய இடவசதியை ஏற்படுத்தி தருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பொது சுகாதார இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


60.55 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 20.14 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதற்கடுத்த இடத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் 13.36 கோடிக்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். இந்த பட்டியலில் 8.32 கோடி தடுப்பூசி போட்டு தமிழ்நாடு 8வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15 முதல் 17 வயது வரையிலான 14,940 பேர் தடுப்பூசி போடுவதற்காக நேற்று காலை முதல் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்கு வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாவது டோஸ் போட்ட தேதியில் இருந்து 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.