கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தமிழ்நாடு காவல்துறை பணியாளர்களில், தீவிர நுரையீரல் பாதிப்பு மற்றும் கொரோனா இறப்பு சம்பவங்கள் மிகக் குறைவு என ஐசிஎம்ஆர் தேசிய தொற்றுநோய் தடுப்பு அமைப்பு மற்றும் வேலூர் சிஎம்சி கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1 லட்சத்துக்கும் அதிகமானோர் (117,524) பணிபுரியும் தமிழ்நாடு காவல்துறையில், 2021 பிப்ரவரி 1ம் தேதி முதல் மே 14 வரை, 67,673 காவலர்கள் இரண்டு கட்ட தடுப்பூசியும், 32,792 பேர் முதல் கட்ட தடுப்பூசி டோஸ்களையும் எடுத்துக் கொண்டனர். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காவலர்களின் எண்ணிக்கை 17,059. இவர்களின் மருத்துவ அறிக்கையை குழு விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
கொரோனா இறப்பு தரவுகள்:
கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழ்நாடு காவல்துறையில் 2021 ஏப்ரல் 13 முதல் மே 14ம் தேதி வரையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் சராசரி இறப்பு வயது 52 ஆக உள்ளது.
இந்த 31 கொரோனா இறப்புகளில், நான்கு பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டவர்கள். ஏழு பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ள 20 பேர் தடுப்பூசிகள் போடாதவர்கள்.
எனவே, கொரோனா இறப்புக்கு எதிரான போராட்டத்தில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை விட முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்டவர்கள் 82% கூடுதல் பாதுகாப்பையும், இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 95 சதவிகித கூடுதல் பாதுகாப்பையும் பெறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
முந்தைய ஆய்வறிக்கைகள்:
தீவிரமான கொரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு 97% பாதுகாப்பு கிடைப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் / அஸ்ட்ராஜெனெகா நடத்திய மூன்றாம் கட்ட பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த இடைக்கால அறிக்கையும் திருப்தி அளிப்பதாகவே உள்ளது.
மேலும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் முன்னதாக தடுப்பூசி செயல்திறன் குறித்த ஆய்வறிக்கையை முன்னதாக வெளியிட்டது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட 8991சுகாதார பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்,"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை விட, முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்ட கொரோனா நோயாளிகள் 70% கூடுதல் பாதுகாப்பையும், இரண்டு கட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் 77% கூடுதல் பாதுக்காப்பையும் பெறுகின்றனர்.
தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு - ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் (NEEDED OXYGEN THERAPHY) மற்றும் தவிர சிகிச்சைப் பிரிவில் (NEEED ICU CARE) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை விட முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்டவர்கள் 95% கூடுதல் பாதுகாப்பையும், இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் முறையே 94% கூடுதல் பாதுகாப்பையும் பெறுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, தடுப்பூசியின் செயல்திறன் குறித்த எங்களது ஆய்வறிக்கை முந்தைய ஆய்வுகளுடன் ஒத்துப் போவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.