18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏப்.10 முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி ஜனவரி 10ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.   


இதன்மூலம், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர்கள், ஆஷா பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டமுன்களப் பணியாளர்கள் மூன்றாம் கட்ட முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.    


இணை நோய்த்தன்மை: 


இதய அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள், சி.டி / எம்.ஆர்.ஐ ஆவணப்படுத்தப்பட்ட பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு சிகிச்சையில் உள்ளவர்கள், நீரிழிவு நோய் (> 10 ஆண்டுகள் அல்லது சிக்கல்களுடன்) மற்றும்  உயர் இரத்த அழுத்தம் சிகிச்சையில் உள்ளவர்கள், முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு நோய்கள் / எச்.ஐ.வி தொற்று பாதிப்புகள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். தற்போது, செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்களில் இந்த முன்னெச்சரிகை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏப்.10 முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிந்தவர்களுக்கு, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 


அதேபோன்று, முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியோ, கோவாக்சின் தடுப்பூசியோ செலுத்தப்பட்டிருந்தால் அதே வகை தடுப்பூசிதான் தற்போது செலுத்தப்படுகிறது. தடுப்பூசியை மாற்றிப் போடும் (Mix and Match) கொள்கை இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


கோ-வின் (C0-win) தளத்தில் பயனாளிகள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தடுப்பூசி மையங்களில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




கொரோனா  தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்பேசி வைத்திருப்பது கட்டாயமல்ல என்றும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு இருப்பிடச்  சான்றை அளிப்பதும் கட்டாயமல்ல என்றும்  கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்றும்  மத்திய அரசு தெளிவுபடுத்தியது.  இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள்கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். 


கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பூசிகள் தடுத்து விடும் என்பது தவறான தகவல்.தடுப்பூசிகள் கொரோனா தொற்று பாதிப்பை அதிகரிக்காமல் தடுக்கக்கூடிய வல்லமையைப் பெற்றிருக்கிற்றது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையை தடுப்பூசிகள் தவிர்க்கும் என்றும் கூறப்படுகிறது. 


எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொது மக்களும் அந்தந்த தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.