கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. 


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகளில் ஏற்படுத்திய பேரழிவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் வேகமெடுக்க தொடங்கியதால் கிட்டதட்ட 6 மாதங்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டது. 


இதன்பின்னர் கொரோனா 2ஆம் அலை கடந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கி கிட்டதட்ட ஆகஸ்ட் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ஏராளமான பொருளாதார இழப்பும், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டது. தற்போது தான் மீண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சீனாவில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.






இது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு உடனடியாக தடுப்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. புதிய வகை கொரோனா விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நேற்று விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் கொரொனா பரவல் நிலவரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதேசமயம் கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. இருப்பினும், புதிய  கொரோனா வகையை கண்டறிய இந்தியாவில் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 


மேலும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை தோராயமான மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள், புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா மாநில அரசுகளை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். 


அதில் , 



  • மாவட்ட வாரியாக ஃப்ளூ போன்ற கடுமையான சுவாச நோய் வழக்குகளை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடுவதை உறுதிசெய்ய வேண்டும்.  அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவு கொரோனா பரிசோதனையை உறுதிசெய்ய வேண்டும்.

  • பொதுமக்கள் கூடும் இடங்களில்   முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். 

  • பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்துவதில் மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.