வரும் செப்டம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 30 லட்சம் முதல் 35 லட்சம் வரையிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம்களை நடத்துவது குறித்து மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நகர்புறம் மற்றும் கிராமபுற பகுதிகளை உள்ளடக்கி 540 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாவட்டத்தில் இம்முகாமில் 50 ஆயிரம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மாபெரும் இயக்கம் நடைபெற உள்ளது. இதற்காக கரூர் மாவட்டம் முழுவதும் 540 இடங்களில் கொரானா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், இந்திய மருத்துவ சங்க பிரதிநிதிகள், இந்திய தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தனியார் செவிலியர் கல்லூரி பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரக பகுதியில் 416 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. கரூர் மாநகராட்சி பகுதியில் 50 இடங்களிலும், குளித்தலை நகராட்சி பகுதியில் 15 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் தலா இரண்டு அல்லது மூன்று முகாம்கள் என மொத்தம் 540 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. தடுப்பூசி ஏற்கனவே போட்டுள்ள நபர்களின் விவரங்கள், இன்னும் போட வேண்டிய நபர்களின் விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் இதுவரை 47 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 10 சதவிகித நபர்களுக்கு இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மீதம் உள்ள அனைவரும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான முகாம் நடத்துவது போலவே தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்துவது வடிவமைக்கப்பட்டுள்ளது.
முகாமிலும் ஒரு தடுப்பூசி செலுத்துபவர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருப்பார்கள் தடுப்பூசி போடும் நபர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய 200 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பணியில் இருப்பார்கள். முகாமிற்கு மிகப்பெரிய அளவில் விரிவான திட்டமிடல் பணிகள் நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
ஒவ்வொரு பகுதி மக்களும் கிராம பகுதியாக இருப்பின் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு உள்ளாகும், நகர்ப்புற பகுதியில் ஒரு கிலோ மீட்டர் அளவிற்குள்ளாகவும் ஊசி போடும் இடத்திற்கு வரும் வகையில் முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் சராசரியாக இருபது முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது கடந்த ஒரு மாதமாக 50 முகாம்களுக்கும் குறையாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று அதிக அளவாக 540 இடங்களில் முகாம் அமைக்கப்படுகிறது, பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக வந்திருந்து தடுப்பூசி முகாமில் தடுப்பு ஊசியை எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து இந்த முகாமினை ஒரு வெற்றி இயக்கமாக மாற்றி கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.