தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களில் இல்லாத அளவு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.


தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டு கடைசி சில மாதங்களில் கொரோனா தொற்று  பாதிப்பு 50-க்கும் கீழ் இருந்தது. இதனால் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. முகக்கவசம் கூட கட்டாயமில்லை என்ற நிலை வந்தது. இந்தியா முழுவதும் தொற்று பாதிப்பு 100 –க்கும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இந்திய அளவில் மொத்த பாதிப்பு 3000 –த்துகும் கீழ் இருந்த நிலையில் தற்போது 5000 –த்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 273 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,366 பேராக உயர்ந்துள்ளது. மேலும் 123 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்புகள் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகள் எதுவுமில்லை என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலிருந்து வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 3,896 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 434 பேர் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டில் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் 90 சதவீதம் xbb வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா வைரஸால் அதிக பாதிப்புகள் இல்லை என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 98 சதவீதம் மக்களுக்கு இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.


தொற்று பாதிப்புகள் அதிகமாகும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதார துறை தரப்பிலும் சென்னை மாநகராட்சி தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தினசரி பரிசோதனை தற்போது 3000 –த்துக்கும் மேல் இருக்கும் நிலையில் அதனை 11,000 –மாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சிகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் மாநகராட்சி தரப்பில் முதல் இரண்டு அலைகளில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.