கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூகப்பரவலாக மாறியிருக்கிறது என்றும் இன்னும் 14 நாள்களில் கொரோனா தொற்று உச்சத்தை அடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 







நாடு முழுவதும் இதுவரை 162.26 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24ம் தேதி கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் அடுத்த சில நாள்களில் கவலைக்குறிய மாறுபாடாக உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டது. டெல்டா மாறுபாட்டைக்காட்டிலும் ஒமிக்ரான் மாறுபாடு வேகமாகப் பரவும் என்று கூறப்பட்டது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் அதிகபாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த புதிய மாறுபாடு இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் தேதி முதன்முதலாக உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவியிருக்கிறது.


இந்த நிலையில் மத்திய அரசின் சுகாரதார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற இன்சாகோக் என்னும் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பெரும்பாலும் அறிகுறியற்றவை அல்லது லேசானவை என்றும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படுவது தற்போதைய அலையில் அதிகரித்துள்ளன. கொரோனாவின் அச்சுறுத்தல் நிலை மாறாமல் உள்ளது. ஒமிக்ரானின் புதிய வடிவான பிஏ2 நாட்டின் கணிசமானப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.



மேலும், ஒமிக்ரானைப் பொறுத்தவரை தற்போது அது சமூகப்பரவலில் உள்ளது. இந்தியாவின் பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு புதிய பாதிப்புகள் தினம்தோறும் அதிகரித்து வருகின்றன என்றும் இந்தியாவில் ஒமிக்ரானின் பரவல் உள்நாட்டு பரிமாற்றம் மூலமாகவே இருக்கும்; ஒமிக்ரான் மாரபனு மாறுபாடான எஸ்ஜீன் விடுபடுதல் அடிப்படையிலான சோதனை அதிக தவறான எதிர்மறை முடிவுகளை தருகிற வாய்ப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அத்துடன், சமீபத்தில் பிரான்ஸில் கண்டறியப்பட்ட ஐஹெச்யு மாறுபாடு கண்காணிக்கப்படுகிறது. இது வேகமாகப் பரவுவதற்கான ஆதாரம் இல்லை; மேலும் இது நோய் எதிர்ப்புக்கு தப்பிக்கின்ற அம்சங்களை கொண்டுள்ளபோதும் அது கவலைக்குரிய மாறுபாடாக தற்போது இல்லை; இதுவரை இந்தியாவில் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும், கொரோனா தொற்றுநோய் விதிகளை பின்பற்றுதல் மற்றும் தடுப்பூசிகள் கொரோனா வைரஸின் அனைத்துவிதமான மாற்றங்களுக்கும் எதிரான முக்கிய கவசங்கள் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


இந்தியாவில் கடந்த ஜனவரி 21ம் தேதி 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக நேற்று  மேலும் குறைந்து 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு 3 கோடியே 92 லட்சத்து 37 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய மொத்த பாதிப்பில் மகாராஸ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே 56.33 சதவித பங்கை பதிவு செய்துள்ளன.


தற்போதைய அலை எப்போது உச்சம் அடையும் என்பது தொடர்பாக சென்னை ஐஐடி கணித்துள்ளது. சென்னை ஐஐடி கணிதவியல் துறையும் கம்ப்யூட்டேஷனல் கணிதம் மற்றும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணக்கீட்டு மாடல் மூலம் கொரோனா பற்றி பகுப்பாய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்த கணக்கீட்டின் படி கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நளில் அதாவது பிப்ரவரி 6ம் தேதிக்குள் உச்சம் அடையும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்தநிலையில், ஒமிக்ரான் அலையால் கொரோனாவே முற்றிலும் முடிவுக்கு வரும் என்று பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோஹித் கூறியுள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான அவர் இது குறித்து கூறுகையில்,  100 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே கொரோனாவிலும் முதல் அலை லேசாகவும் 2வது அலை மிக மோசமாகவும் இருந்தது.


1918-ஆம் ஆண்டில் பரவ ஆரம்பித்த ஸ்பானிஷ் காய்ச்சல் உலகம் முழுவதும் உள்ள 35% பேரை பாதிப்புக்குள்ளாக்கிய பின் 1920ல் முடிவுக்கு வந்தது. அதாவது, 2வது அலைக்குப் பின் ஸ்பானிஷ் காய்ச்சல் மிகவு லேசாக அதாவது சார்தாரண ஜலதோஷம் போலவே மாறியது. அதைப் போல கொரோனாவின் 3வது அலையும் 2வது அலையை விட லேசாகவும் அதிக பாதிப்பு இல்லாமலும் மாறியிருக்கிறது. இதற்குப் பிறகு 4வது அலை இந்தியாவில் இருக்காது. தற்போதையச் சான்றுகளைப் பார்க்கும்போது இந்த தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு மாறுபாடாகவே ஒமிக்ரான் அலை மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.