முதலமைச்சர் ஆலோசனை:


புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.


சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அந்த நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டில் அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


புதிய கட்டுப்பாடுகள்:


பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று முதலமைச்சர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும் போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 


உருமாறும் கொரோனா:


கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், காமா, கப்பா, ஒமிக்ரான் என உருமாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் உயிரிழப்பு இல்லாமலே இருந்து வந்தது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு 4 கோடி ரூபாய் செலவில் மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் குறைவாகவே பரவுகிறது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது." தமிழக சுகாதார துறைச் செயலாளர் தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 


கொரோனா பரிசோதனை கட்டாயம்:


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் கூட  சீனா மற்றும் ஹாங்காங் பகுதியிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் அனுமதி வழங்க தமிழக பொது சுகாதாரத்துறை  தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே 2% விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த மாதம் அதனை ரத்து செய்தது. 


இருப்பினும் தற்போது கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் மீண்டும் முழு வீச்சில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி கோரியுள்ளது பொது சுகாதாரத் துறை.