PM MODI: பிரதமர் மோடி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். சீனா அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.  இதில், மத்திய அமைச்சர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.


கொரோனா அச்சுறுத்தல்:


சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அந்த நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டில் அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில், "ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவுகிறது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி கொரோனா டெஸ்ட் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதம் கடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் 10 விதமாக உருமாற்றம் பெற்றுள்ளது.


கண்காணிப்பு தீவிரம்:


கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், காமா, கப்பா, ஒமிக்ரான் என உருமாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் உயிரிழப்பு இல்லாமலே இருந்து வந்தது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு 4 கோடி ரூபாய் செலவில் மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் குறைவாகவே பரவுகிறது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது." 


அதேபோல் தமிழக சுகாதார துறைச் செயலாளர் தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.  அதில், சமீபகாலத்தில் சீனாவில் கொரோனா தாண்டவம் உச்சத்தில் உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1,48,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 430 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 


பி.எஃப்.27:


கொரோனா உச்சத்தில் இருந்தால் கூட சீனாவில் ஒரு சில பகுதியில் சீரோ கோவிட் பாலிஸியை தளர்த்தியுள்ளது சீன அரசு. மேலும் ஒமிக்ரான் BF7 என கூறப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் உலக சுகாதார மையமும் இந்த வகை உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் முந்தைய மாறுபாடுகள் காட்டிலும் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 


தமிழகத்தில் கடந்த வாரத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது ஆனால் உயிரிழப்பு எதுவும் இல்லை. தமிழக அரசு தரப்பில் 97% பேருக்கு முதல் தவனை தடுப்பூசி போடப்பட்டுள்ளது அதேபோல் 92% பேருக்கு இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 


சீனா, ஹாங்காங் பயணிகளுக்கு பரிசோதனை:


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் கூட  சீனா மற்றும் ஹாங்காங் பகுதியிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் அனுமதி வழங்க தமிழக பொது சுகாதாரத்துறை  தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே 2% விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த மாதம் அதனை ரத்து செய்தது. 


இருப்பினும் தற்போது கொரோனா அச்சுறித்தி வரும் நிலையில் மீண்டும் முழு வீச்சில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி கோரியுள்ளது பொது சுகாதாரத் துறை.  


கொரோனா வைரசின் இரண்டு அலைகளை எதிர்கொண்ட பிறகு, மெல்ல மெல்ல தற்போதுதான் மக்கள் மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதும், அதன் தாக்கம் ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எதிரொலித்திருப்பதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், மத்திய அரசு மாநிலங்களை நேற்று உஷார்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமா? ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.