15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கிவைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வகை தொற்றுக்கு எதிரான தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் . உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, 2022 ஜனவரி 3ம் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் படயிருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், முன் கள பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் அதிக ஆபத்து கொண்ட பிரிவினர் இந்த பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மாநகராட்சி பள்ளியில் தொடங்கும் என்றும், 15-18 வயதை சேர்ந்த சுமார் 33 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என்றும் கூறினார்.
மேலும், 60 வயதைத் கடந்த 1.04 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் என்றும், இவர்களுக்கு 10ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒமிக்ரான் பாதிப்புகளை ஆய்வு செய்ய 4 பேர் அடங்கிய மத்தியக் குழு இன்று இரவு சென்னை வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறிய அமைச்சர், தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளதாகவும், 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 16-ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது என்றும், 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்