Vaccine Against Covid-19: 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், 2020ஆம் அண்டில் உலகத்தையே ஆட்டிப்படைத்தது. இதில் இருந்து மக்களை காப்பற்ற ஒவ்வொரு நாடும் தனித்தனி தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் மும்மரமாக இயங்கின. இதில் இந்தியா கோவேக்ஷின் எனும் தடுப்பூசியை தயாரித்தது. கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் உருவாக்கியுள்ள நாசல் எனும் தடுப்பு மருந்து, அவசர நிலையில் பயன்படுத்த தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை குறிப்பிட்ட அளவில் மட்டும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து முதல் முறையாக தயாரிக்கப்பட்ட மூக்கு வழியாக செலுத்தப்படும் சொட்டு மருந்து என மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் இந்த மருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த நாசல் தடுப்பூசிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு கிடைத்துள்ள பெரும் ஊக்கம்! பாரத் பயோடெக்கின் ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு) மறுசீரமைப்பு நாசல் தடுப்பு மருந்து பாரத் பயோடெக்கால் கோவிட்-19 க்கு எதிரான முதன்மை நோய்த்தடுப்புக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால சூழ்நிலையில் குறிப்பிடுள்ள அளவிலான பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா தனது அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தியுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.
கொரோனாவை சரி செய்ய இனி புதிய மருந்து
பிப்ரவரியில், நாட்டின் முதல் கோவிட் எதிர்ப்பு மருந்து, மும்பையை தளமாகக் கொண்ட க்ளென்மார்க், வயது வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அதாவது 18 வயதுக்கு மேம்பட்ட, SaNOtize உடன் இணைந்து நாசல் ஸ்ப்ரேயை (பெபிஸ்ப்ரே என்று பெயரிடப்பட்டது) அறிமுகப்படுத்தியது. விரைவுபடுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறையின் ஒரு பகுதியாக நைட்ரிக் ஆக்சைடு நாசல் ஸ்ப்ரேக்கான தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் அனுமதிகளை நிறுவனம் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடமிருந்து பெற்றது. "இந்தியாவில் மூன்று கட்ட சோதனைகள் முக்கிய இறுதிப்புள்ளிகளை எட்டியது. மேலும், இது, 24 மணி நேரத்தில் 94 சதவிகிதம் மற்றும் 48 மணி நேரத்தில் 99 சதவிகிதம் பரவும் தன்மை குறைப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது" என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது எனவும் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இன்றைய தொற்றுநோய் நிலையைப் பொறுத்தவரை, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவில் ஒரே நாளில் 4,417 கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ளன, இந்த தொற்று அளவானது, கடந்த மூன்று மாதங்களில் மிகக் குறைவான தொற்று பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் புதிதாக 463 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மக்கள் அதிகம் நெருக்கடியில் வாழும், சென்னையில் 82 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.