கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வதன் மூலம், ஊசி போட்டபின் வலி குறைவாக இருக்கும் என்று எண்ணி மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சில நாடுகளில் தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட நிலையில், மற்ற நாடுகள் தடுப்பூசி விரைவாக போட்டு அடுத்த கொரோனா அலையில் இருந்து தப்பிக்க முனைப்பு காட்டி வருகிறது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு இளைஞர்களும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி மையங்களில் சென்று தடுப்பூசி போட்டு கொள்ள தொடங்கி உள்ளனர்.
தடுப்பூசி தொடங்கிய நாள் முதல் பல போலி செய்திகள் சமூக ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கிறது. இதை அடுத்து சிலர் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வரும் நிலையில் இந்த செய்திகளுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தடுப்பூசி பற்றிய அனைத்து தகவல்களும், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பல கேள்விகளுக்கான பதிலும் அதில் இடம் பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் குறைந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதில் மிகவும் பொதுவானது உடல் வலி. இந்த வலியை குறைக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாக வலி மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர். இது போன்று தடுப்பூசிக்கு முன்னதாக வலி மாத்திரைகளை எடுத்து கொள்வது தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தடுப்பூசிக்கு பிறகு ஒருவருக்கு காய்ச்சல், தலை வலி, உடல் வலி வந்தால் என்ன செய்யவேண்டும் ?
உலக சுகாதார அமைப்பின் கூறுபடி, தடுப்பூசிக்கு பிறகு வலி, காய்ச்சல், உடல் வலி, தசை வலி, கை வலி இருந்தால் வலி நிவாரணிகள் அல்லது பாராசிட்டமால் பயன்படுத்தலாம். தடுப்பூசி போட்ட பிறகு வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம். ஆனால் தடுப்பூசி போடுவவதற்கு முன் பயன்படுத்தக்கூடாது. செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தடுப்பூசியின் பக்கவிளைவுகளை தடுக்க கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு முன் வலி நிவாரணிகளை எடுத்து பரிந்துரைக்கப்படவில்லை. தடுப்பூசி போட்ட பிறகு தசைவலி, உடல் வலி இருந்தால் வலி நிவாரணிகளை எடுத்து கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
தடுப்பூசி போடுவதற்கு முன்பாக வலி நிவாரணிகளை எடுத்து கொள்வது தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். கை வலி, உடல் வலி , காய்ச்சல் பக்க விளைவுகள் அனைவருக்கும் வரும் என்று கூறமுடியாது. சிலருக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு ஒவ்வாமை நோய் இருக்கலாம். பொதுவாக ஆண்டி ஹிஸ்டமின்கள் ஒவ்வாமை நோய்க்கு தர கூடிய மருத்துங்கள். ஒவ்வாமை நோய் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து, தடுப்பூசிக்கு பிறகு வரும் ஒவ்வாமைக்கு தகுந்தாற்போல் ஆண்டிஹிஸ்டமின்கள் பரிந்துரைக்கப்படலாம். ஆனால் தடுப்பூசிக்கு முன்னதாக வலி நிவாரணிகள் எடுத்து கொள்ளக்கூடாது. இது தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் கூறுகின்றனர்