18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி விலையை குறைக்க அதனை தயாரிக்கும் சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளின் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக உடலில் தடுப்பூசி செலுத்தப்பட்டால், அந்த நோய் கிருமிக்கு எதிராக போரிட தடுப்பு மருந்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிக்கும். சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தவணைகளில் அதாவது ஒன்றுக்கும் மேலான டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ள வேண்டியிருக்கும்.



கொரோனா தடுப்பு மருந்தின் முழு (இரண்டு) டோஸ்கள் மூலம் கிடைத்த நோய் எதிர்ப்பு ஆற்றல் காலப்போக்கில் குறையும் பொழுது, மேலும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் அதிகரிப்பதற்காக பூஸ்டர் தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை நாளை முதல் அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்ட தகுதி உடையோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவிப்பு வந்தது, அதுபோல நாளை முதல் துவங்க உள்ளது. இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இரண்டாவது தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் கழிந்தவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் விலை கணிசமாக குறைந்து உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசிவிலையை ரூ.600ல் இருந்து ரூ.225 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டதாக அடார் பூனாவாலா கூறியுள்ளார். அதேபோல், கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைக்கப்படுவதாக, பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை இயக்குனர் சுசித்ரா கூறியுள்ளார். தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் விலை ரூ.1,200ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.