நைஜீரியாவில் இருந்து மஹாராஷ்டிரா வந்த 12 வயது சிறுமிக்கு பல் வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 'ஒமிக்ரான்' வகை தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, 'அவரது குடும்பத்தினர் ஐந்து பேருக்கும் 'ஒமிக்ரான்' வகை தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இருந்து மஹாராஷ்டிரா வின் புனே அருகில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதிக்கு கடந்த மாதம் 24 ம் தேதி மூன்று பேர் பயணித்து வந்துள்ளனர். அந்த குடும்பத்தில் உள்ள 12 வயது சிறுமிக்கு சில நாட்களாக பல் வலி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வலி தாங்கமுடியாத சிறுமி பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா பரிசோதனை செய்து வர கோரியுள்ளார்.
இதையடுத்து செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், மரபணு வரிசை சோதனைக்கு அனுப்பியபோது ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறுமியுடன் நைஜீரியாவில் இருந்து வந்த இருவர் உட்பட அவரது குடும்பத்தினர் ஐந்து பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரான் வகை தொற்று உறுதியானது. இந்த 5 பேரில் 18 மாத குழந்தைக்கு ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்று கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து உலகத்தை சிறைப்பிடித்து வைத்திருந்தது. உலகம் முழுவதும் அந்த தொற்றால் பலர் உயிரிழந்தனர். உயிரிழப்பையும், தொற்று பரவலையும் தடுப்பதற்கு உலகின் அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின.
கொரோனா முதல் அலையில் பாடம் கற்றுக்கொண்ட உலக நாடுகள் அந்தத் தொற்றின் இரண்டாம் அலையை ஓரளவு சமாளித்தன. ஆனாலும் இரண்டாவது அலையிலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இரண்டாம் அலையும் முடிவுக்கு வந்ததால் மனிதர்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பினர்.
கொரோனாவின் இரண்டு அலைகளுக்கு ஓய்ந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டநிலையில், அடுத்த அதிர்ச்சியாக ஒமிக்ரான் என்ற தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரஸின் மாறுபட்ட வடிவமான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதல்முறையாக கண்டறியப்பட்டது. வேகமாக பரவும் தன்மையை கொண்ட இந்த ஒமிக்ரானை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்தாலும் இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக இருக்கிறது. மேலும், நேற்று பிரிட்டனில் ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் உயிரிழந்ததாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். உலகில் ஒமிக்ரான் தொற்றால் பலியான முதல் உயிர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்