தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை, கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது. இதனால், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 65092 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 409 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து, கடந்த ஏப்., 1 முதல் மே 22-ஆம் தேதி வரை 52 நாட்களில் 13,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 85 பேர் இறந்துள்ளனர். இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 28,806 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 198-ஆகவும் உள்ளது. இதேபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் 31 வரை 10,951 பேர் பாதிக்கப்பட்டு, 108 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து, ஏப்., 1 முதல் மே 22ம் தேதி வரை 6,881 பேர் பாதிக்கப்பட்டு, 13 பேர் இறந்தனர். இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 17,832 ஆகவும், இறப்பு 121 ஆகவும் உள்ளது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் இருந்த பாதிப்பை விட, கடந்த இரண்டு மாதத்தில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்களின் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. அதனையொட்டி காலை முதலே கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடை வீதிகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். நேரம் போக, போக மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில், சமூக இடைவெளியை பின்பற்றாமல், கடைகளில் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். இதனால், திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. ஒரே நாளில் அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி நகரப்பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.
மக்கள் கூட்டத்தை கண்ட சமூக ஆர்வலர்கள், கொரோனா அதிகரித்துவரும் சூழலில், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அரசு அறிவுறுத்தியிருக்கலாம். மாறாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடியதால் கொரோனா தொற்று அதிகரித்து விடுமோ என அச்சப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை 40341 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36645 போ் குணமடைந்தனர். 308 போ் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 24751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21594 போ் குணமடைந்தனர். 182 போ் உயிரிழந்தனர். இந்த தினசரி பாதிப்பு பொதுமுடக்கம் காரணமாக படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்தநிலையில் இன்று (13-06-2021) 170 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள சுகாதார கிடங்கில் தடுப்பூசிகள் கையிருப்பு ஏதும் இல்லாததன் காரணமாக கடந்த 8-ஆம் தேதியில் இருந்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் மாலை கோவிஷீல்டு தடுப்பூசி 10 ஆயிரம் டோஸ்களும், கோவேக்சின் தடுப்பூசி 1,500 டோஸ்களும் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டன. கடலூரில் உள்ள குளிர்சாதன மருந்து கிடங்கிற்கு வந்திறங்கிய இந்த தடுப்பூசி மருந்துகளை விழுப்புரத்தை சேர்ந்த சுகாதாரத்துறையினர், கடலூரில் இருந்து பெற்று விழுப்புரம் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் கிராமப்புற, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 72 இடங்களிலும், கூடுதலாக 28 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தியும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ”தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு 11,500 டோஸ் தடுப்பூசி சென்னையில் இருந்து வந்துள்ளன. மொத்தம் 100 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்துவருகிறது. ஒரு முகாமில் 100 பேர் வீதம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம். இனி வரும் நாட்களிலும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்ப மாவட்டத்திற்கு தேவையான அளவிற்கு தடுப்பூசி மருந்துகளை அனுப்புமாறு நாங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை பொறுத்து முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி மருந்துகளை அனுப்புவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆகவே சென்னையில் இருந்து வரப்பெறும் தடுப்பூசி மருந்துகளை பொறுத்து அவற்றை மாவட்ட சுகாதார கிடங்கில் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு செலுத்தப்படும்” என்றார்.