காபியில் காணப்படும் காஃபின், பாலிபினால்கள் மற்றும் பிற இயற்கை பொருட்கள், டைப் 2 நீரிழிவு (T2D) உள்ள அதிக எடை கொண்டவர்களில், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (NAFLD) தீவிரத்தை குறைக்க உதவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் கல்லீரல் கோளாறுதான்.  இது சிரோசிஸ் (கல்லீரலில் தழும்புகள்) மற்றும் கல்லீரல் புற்றுநோயாக மாறலாம் என்று போர்ச்சுகலை தளமாகக்கொண்ட கோயம்ப்ரா பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.


 ஃபேட்டி லிவர் நோயின் முக்கிய காரணம் அதிகப்படியான மது அருந்துதல் மட்டுமல்ல. மாறாக சிறிய உடல் உழைப்பு மற்றும் அதிக கலோரி உணவுகளுடன் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை மேற்கொள்வதாலும் நிகழ்கிறது. "நவீன உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, உடல் பருமன் அதிகரிப்பு இது போன்ற கல்லீரல் நோயின் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன, இது இறுதியில் மிகவும் கடுமையான மற்றும் மீள முடியாத நிலைமைகளாக உருவாகலாம்" என்று ஆய்வின் ஆசிரியர் ஜான் கூறுகிறார். 


சிறுநீரில் உள்ள காஃபின் மற்றும் காஃபின் அல்லாத வளர்சிதை மாற்றங்களின் அதிக அளவுகள் தீவிரத்தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதன்படி ஆய்வில், அதிக காபி உட்கொள்ளும் நபர்கள் ஆரோக்கியமான கல்லீரல்களைக் கொண்டிருந்தனர், ஆனால் அதிக காஃபின் உட்கொண்டவர்களுக்கு கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் வருவதற்கான வாய்ப்புகளும் குறைவாகக் காணப்பட்டது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 


முன்னதாக, 2020 ஆம் ஆண்டில் 46 நாடுகளில் புற்றுநோய் இறப்புக்கான முதல் மூன்று காரணங்களில் முதன்மை கல்லீரல் புற்றுநோய் இருந்தது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து மேலும் 2040ம் ஆண்டிற்குள் முதன்மை கல்லீரல் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 55 சதவீதத்திற்கும் அதிகமாக உயரக்கூடும் என்றும் ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. எல்செவியர் வெளியிட்ட ஹெபடாலஜி இதழில் புதிய ஆய்வில் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் "புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட உலகளாவிய புற்றுநோய் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் இறப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில், கல்லீரல் புற்றுநோய் தொடர்பான புதிய மதிப்பீடுகளை வழங்கவும், தேசிய கல்லீரல் புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான அத்தியாவசிய கருவியை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்" என்று இதழின் ஆசிரியர் ஹாரியட் ரம்கே விளக்கியுள்ளார். இவர் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட மாணவராக இருக்கிறார்.




"இந்தப் ஆய்வில், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் இறப்புகளுக்கான வரிசையில் கல்லீரல் புற்றுநோய் எந்த இடத்தில் உள்ளது என்பதை நாங்கள் விவரிக்கிறோம். 2040ம் ஆண்டுக்கான எதிர்கால கல்லீரல் புற்றுநோய் தாக்கத்தைப் பற்றிய கணிப்புகளையும் நாங்கள் முன்வைக்கிறோம்," என்று ஆசிரியர் மேலும் அந்த இதழில் குறிப்பிட்டுள்ளார். 2020ம் ஆண்டில் 8.3 லட்சத்திற்கும் அதிகமான கல்லீரல் புற்றுநோய் இறப்புகள் பதிவாகியுள்ளன. உலகெங்கிலும் உள்ள 185 நாடுகளில் 36 வகையான புற்றுநோய்கள் எவ்வளவு பாதித்திருக்கிறது மற்றும் அதன் இறப்பு மதிப்பீடுகளை தயாரிக்கும் GLOBOCAN 2020 தரவுத்தளத்தின் ஆராய்ச்சிக்கான சர்வதேச ஏஜென்சியிடமிருந்து இந்த முதன்மை கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் பற்றிய தரவை ஆய்வாளர்கள் பிரித்தெடுத்தனர்.


ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட மக்கள்தொகை கணிப்புகளைப் பயன்படுத்தி 2040 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பரவல் அல்லது இறப்பு எண்ணிக்கையில் கணிக்கப்பட்ட மாற்றம்  மதிப்பிடப்பட்டது. 2020ம் ஆண்டில், 9,05,700 நபர்கள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகளவில் 8,30,200 பேர் கல்லீரல் புற்றுநோயால் இறந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளின்படி, கல்லீரல் புற்றுநோய் இப்போது 46 நாடுகளில் புற்றுநோய் இறப்புக்கான முதல் மூன்று காரணங்களில் ஒன்றாகும், மேலும் பல உயர் பொருளாதார நாடுகள் உட்பட கிட்டத்தட்ட 100 நாடுகளில் புற்றுநோய் இறப்புக்கான முதல் ஐந்து காரணங்களில் ஒன்றாகவும் உள்ளது. கிழக்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் இந்த கணிப்பின்படி அதிகமாக இருந்தது.