இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டாலே பொதுவாக நாம் அதனை மாரடைப்பு ஹார்ட் அட்டாக் என மாற்றி மாற்றிக் குறிப்பிடுவோம். பொது அறிவைப் பொருத்தவரை இரண்டுமே ஒன்றுதான். ஆனால் இரண்டும் வெவ்வேறு என்கிறார்கள் மருத்துவர்கள்.
கடந்தவருடம் பிப்ரவரி மாதம் 24ந் தேதி பாலிவுட் நடிகர் ஸ்ரீதேவி தனது வீட்டின் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஸ்ரீதேவிக்கு ஏற்பட்டது மாரடைப்பு.
மாரடைப்பு என்பது இதயம் திடீரென உடலுக்கு ரத்தத்தை வெளியேற்றுவதை நிறுத்துவதால் ஏற்படுவது. இதயத்துக்குச் செல்லும் மின்சார சிக்னல்களில் ஏற்படும் பாதிப்பால் இது உண்டாகும். ரத்த வெளியேற்றம் தடைபடும்போது மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைபடும் இதனால் நோயாளிக்கு மூச்சுவிடுவதில் பாதிப்பு ஏற்பட்டு நினைவுதவறி மயங்கி விழுவார்கள்.
மாரடைப்புக்கு பல காரணங்கள் உள்ளன, மாரடைப்பு மிகவும் பொதுவான நோயாகும். பிறவியிலேயே இதயப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது இதயத்துக்கு மின்சார சிக்னல்கள் செல்வதில் பிரச்னை உள்ளவர்கள் மாரடைப்புக்கு ஆளாக நேரிடும்.
மாரடைப்பு ஏற்படும் சூழலில், நோயாளிகள் திடீரென சுயநினைவை தவறி மயங்கி விழுவார்கள். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு உடல் சில எச்சரிக்கைகளை வெளிப்படுத்தும். அதாவது, மார்பில் லேசான வலி, மூச்சுத் திணறல், அசௌகரியம் மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படும். மக்கள் பெரும்பாலும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள் ஆனால் இவைதான் மாரடைப்புக்கான பொதுவான சில அறிகுறியாகும். மன அழுத்தம் மற்றும் சாப்பிடும் உணவினால் கூட இதயத்தில் மோசமான தாக்கத்தை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான, ஆரோக்கியமான, சீரான உணவுப் பழக்க வழக்கத்தைப் கொண்டிருப்பது அபாயத்தைத் தடுக்கும்.
ஹார்ட் அட்டாக் அல்லது நெஞ்சுவலி என்றால் என்ன?
மருத்துவ மொழியில் மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன் எனப்படும் ஹார் அட்டாக் மாரடைப்பிலிருந்து மாறுபட்டது. இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் நாளத்தில் ஏற்படும் அடைப்பு காரணமாக இந்த ஹார்ட் அட்டாக் ஏற்படும். ரத்தம் செல்லுவது நின்றுபோவதால் இதயம் வலுவிழக்கத் தொடங்கும். சில சமயங்களில் இதயத்தின் ஒருபகுதிக்கோ அல்லது ஒட்டுமொத்த இதயத்துக்கோ ரத்தம் செல்லுவது தடைபடும். இதனால் அந்தப் பகுதி தசையில் இருக்கும் செல்கள் மெல்ல இறக்கத் தொடங்கும். இதயம் தனது வேலையை இதன் பிறகு செய்யும் என்றாலும் அதனால் பழையபடி இயங்கமுடியாது. புரியும்படி சொன்னால் இதயத்தின் ப்ளம்பிங் குழாயில் ஏற்படும் பிரச்னையால் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது எனலாம்.
மாரடைப்பைப் பொருத்தவரை உடனடியாக சிபிஆர் செய்வதால் மீட்க முடியும், இருந்தும் மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பு பாதிப்பு ஏற்படுபவர்களில் 90 சதவிகிதம் பேர் இறக்கின்றனர் என்கிறது ஆய்வு. அதுவே ஹார்ட் அட்டாக்கை பொருத்தவரை இதயம் உடனடியாக அல்லாமல் சிறிது சிறிதாகவே தனது செயல்பாட்டை நிறுத்தும் என்பதால் மாரடைப்பு அளவுக்கு ஆபத்தானது இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.