காலைல எந்திருச்சா ஒரு கப் சூடான காபி அல்லது டீ குடிச்சாதாங்க நம்ம வண்டியே ஓடும் சொல்றவங்க ஏராளம். இன்னும் சிலர் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ அப்போதெல்லாம் காபி, டீ குடிப்பார்கள். இன்னும் சிலர் காபி, டீ குடிப்பதற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.
காபி, டீ பழக்கம் குறித்து வெப்சைட் ஸ்டோரி முதல் ஆய்வுக் கட்டுரைகள் வரை ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. காபி நம் நரம்பு மண்டலத்தை தூண்டக் கூடியது என்று பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. இந்நிலையில் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் டிம்பிள் ஜங்டா இன்ஸ்டாகிராமில் காபி, டீ பழக்கம் உள்ளவர்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் மூன்று விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
காபியை அதிரடியாக கைவிடலாமா?
காபியை கைவிடுவது அவரவர் விருப்பம். ஆனால் ஒரே அடியாக அப்படியே காபி அருந்தும் பழக்கத்தை நிறுத்தினால் அது உங்களது நரம்பு மண்டலத்திற்கு ஒரு அதிர்ச்சியைத் தருமாம். அதனால் சோர்வு, படபடப்பு, மன அழுத்தம், கவனச்சிதறல் ஆகியன ஏற்படுமாம். உடல் கேஃபைனை வேகமாக ஸ்வீகரித்துக் கொள்ளும். கல்லீரல் வழியாக ப்ராசஸ் ஆகும் இந்த கேஃபைன் பல மணி நேரம் உடலில் ஒட்டிக் கொள்ளும் என்று கூறுகிறார் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் டிம்பிள் ஜங்டா.
5 மணி நேரம் தாக்கம் இருக்கும்:
ஊடச்சத்து நிபுணரான இஸ்டி சலுஜா கூறுகையில், கேஃபைன் தாக்கம் உடலில் 5 முதல் 7 மணி நேரம் வரை இருக்கும். நீங்கள் ஒரு கோப்பை காபி அருந்தி அதில் 100 மில்லி கிராம் கேஃபைன் இருந்தால். அதை நீங்கள் மாலை 3 மணிக்கு அருந்தியிருந்தால். இரவு 9 மணியளவில் அதில் குறைந்தது 50 மில்லி கிராம் கஃபைன் உங்கள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும். இதனால் இது உங்கள் இரவு தூக்கத்தைக் கூட பாதிக்கும் என்கிறார்.
வெறும் வயிற்றில் காபி, டீ கூடாது.
வெறும் வயிற்றில் காபி, டீ அருந்தக் கூடாது. இது உங்கள் குடலை வறட்சியடையச் செய்யும். நீண்ட காலமாக காபி, டீயை இவ்வாறு அருந்துபவர்களுக்கு வாதம், பித்தம் சமத்துவமின்மை அதிகரிக்கும்.
இதேபோல் டாக்டர் கரிஷ்மா ஷா என்று ஊடச்சத்து நிபுணரும் இதையே கூறுகிறார். கஃபைன் டையுரெடிக் பண்பு கொண்டது. அதனால் இது நீரிழப்பை ஏற்படுத்து. அசிடிட்டியை அதிகரிக்கும் என்கிறார்.
உங்கள் காபி அல்லது டீயில் தாவரம் அடிப்படையிலான பால் இருப்பதை உறுதி செய்யுங்கள். அதாவது பாதாம் மில்க், தேங்காய் பால். ஓட் மில்க் என ஏதேனும் ஒன்றிலிருந்து எடுத்த பாலாக இருக்கலாம். பாலுடன் தேயிலையை சேர்த்து அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது. அது அதன் அமிலத் தன்மையை அதிகரிக்கும்.
தேநீரில் லவங்கப் பட்டை, இஞ்சி, ஏலக்காய், மிளகு, ஸ்டார் அனிஸ் அல்லது அஸ்வகந்தா சேருங்கள். இதனால் உங்கள் நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறும். அதே வேளையில் கஃபைனின் தாக்கம் உடலில் அதிக நேரம் இருக்காது.