மக்களை ரத்த தானம் செலுத்துவதற்காக ஊக்குவிக்கவும், விழிப்புணர்வு மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் தினமும் சுமார் 12 ஆயிரம் பேர் போதிய ரத்தம் பெற முடியாததால் உயிரிழப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. ரத்த தானம் என்பது சமூகத்தில் மிக முக்கியமானது, ஒரு யூனிட் ரத்தம் கொடை தருவதன் மூலமாக சுமார் 3 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும், ரத்தத்தை ப்ளேட்லெட், ப்ளாஸ்மா, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவற்றைப் பிரித்தும் கொடை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் தரவுகள் இவ்வாறு இருக்க, மக்களுள் பலரும் பல்வேறு வதந்திகள் காரணமாக ரத்த தானம் மேற்கொள்ள மறுக்கும் சூழலும் உருவாகிறது. ரத்த தானம் குறித்த வதந்திகளையும், அவற்றின் உண்மைத்தன்மைகளை இங்கே கொடுத்துள்ளோம்...
1. உடலைப் பலவீனமாக்குகிறது
ரத்த தானம் செய்வதால் உடல் பலவீனமாகிறது என்பதைப் பலரும் நம்புகின்றனர்.
உண்மைத்தன்மை: ரத்த தானம் மேற்கொண்ட பிறகு உடல் பலவீனமடைவதில்லை. மேலும், ஒரு பிண்ட் ரத்தம் மட்டுமே கொடையாக எடுக்கப்படுகிறது. சராசரியாக மனித உடலில் சுமார் 10 முதல் 12 பிண்ட் வரையிலான ரத்தம் இருக்கும். மேலும், கொடை மேற்கொண்ட பிறகு, ரத்தம் மீண்டும் உற்பத்தியாகும். ரத்த தானம் மேற்கொள்வதற்கு முன்பும், பின்பும் போதிய ஆரோக்கியமான உணவு, நீர்ச்சத்து முதலானவற்றை உட்கொள்வது சிறந்தது.
2. ரத்த தானம் வலிமிக்கது
ரத்த தானம் செய்யும் போது வலி ஏற்பட்டு, நீண்ட நாள்கள் நீடிக்கும் என்று மூடநம்பிக்கை ஒன்றுண்டு.
உண்மைத்தன்மை: ரத்த நாளங்களில் ஊசியை ஏற்றும்போது தவிர வேறு எந்த வலியும் ரத்த தானத்தால் ஏற்படுவதில்லை. ஊசியால் ஏற்படும் வலியும் இரண்டு நாள்களுக்குள் ஆறிவிடும்.
3. புகைப்பிடிப்பவர்களால் ரத்தம் கொடை அளிக்க முடியாது
புகைப்பிடிப்பதைப் பழக்கமாகக் கொண்டவர்கள் ரத்த தானம் அளிக்க முடியாது என நம்பப்படுகிறது.
உண்மைத்தன்மை: ஒருவர் 18 வயதைக் கடந்தவராக இருந்து, புகைபிடிப்பவராக இருந்தாலும் அவரால் ரத்த தானம் வழங்க முடியும். ரத்த தானம் கொடுப்பதற்கும் கொடுத்த பிறகும் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை புகைப்பிடிப்பதையும், 24 மணி நேரங்களை வரை மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். கொடையாக அளிக்கும் ரத்தம் சிகிச்சையில் இருக்கும் நபரின் உடலுக்குச் செல்வதால், ரத்த தானம் மேற்கொள்ள விரும்புபவர்கள் புகைப்பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.
4. மெலிந்த தேகம் கொண்டவர்களால் ரத்த தானம் அளிக்க முடியாது
மெலிந்த தேகம் கொண்டவர்கள் ரத்த தானம் அளிக்க முடியாது என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது.
உண்மைத்தன்மை: ரத்தக் கொடையாளரின் தகுதியை அவரது உடல்வாகு தீர்மானிப்பதில்லை. குறைந்தபட்சம் 45 கிலோ எடை கொண்டவராக ரத்தக் கொடையாளர் இருக்க வேண்டும். எனவே ஒல்லியாக இருப்பவர்கள் ரத்த தானம் அளிக்க கூடாது என்பதில் உண்மை இல்லை. மேலும், உடல் எடைக்கும் மனித உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தின் அளவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை.
5. ரத்த தானம் நோய்த் தொற்றை உருவாக்குகிறது
ரத்த தானம் காரணமாக ஹெச்.ஐ.வி முதலான நோய்த் தொற்று ஏற்படுவதாகப் பலரும் நம்புகின்றனர்.
உண்மைத்தன்மை: ரத்த தானம் அளிக்கும் போது, புதிய ஊசி பயன்படுத்தபடுகிறதா என்பதை சோதிக்க வேண்டும். புதிய ஊசி பயன்படுத்தப்பட்டால், நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.