இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோய் மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகின்றன. முக்கியமாக வயதான பெண்களை விட இளம் வயது பெண்களில் பொதுவாக அடர்த்தியான மார்பக திசுக்களைக் கொண்டிருப்பதால் இந்த புற்றுநோயை கண்டறிவது மிகவும் சவாலாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தங்கள் மார்பகங்களில் அடர்த்தியான திசுக்கள் இருப்பதால் மார்பக கட்டிகளை கண்டறிய இயலாது எனப்படுகிறது. மார்பக புற்றுநோய் வயது வரம்பின்றி அனைத்து பெண்களையும் பாதிக்கும் என்பதால் இந்த புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகள்:  



  • ஏற்கனவே மார்பக புற்றுநோய் பாதிப்பு அல்லது மார்பகத்தில் வேறு நோய் பாதிப்பு இருந்தால் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்

  • குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்தால், பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது

  • 40 வயதுக்குள் மார்பக கதிர்வீச்சு சிகிச்சை 

  • BRCA1 or BRCA2 என்ற மரபணு சார்ந்த மாற்றம் 

  • முதல் குழந்தை பெற்றெடுக்கும் போது பெண்ணின் வயது (32 வயதுக்கு மேல்), ஆகியவை ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணிகளாக உள்ளது.


40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும். பெண்கள் மார்பகங்களில் கட்டிகள் தென்பட்டால்  அலட்சியமாக இருக்காமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  


இளம் பெண்களில் மார்பக புற்றுநோய் கண்டறிவது: 


20 வயதுக்கு மேல் இருக்கும் இளம் பெண்கள் கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இளம் பெண்களுக்கு டிஜிட்டல் முறை மேமோகிராம், பாரம்பரிய மேமோகிராமிற்கு மாற்றாக அமைந்துள்ளது. அடர்த்தியான மார்பக திசுக்கள் இருப்பதால், டிஜிட்டல் மேமோகிராபி மூலம் மார்பக கட்டிகள் கண்டறிய முடியும் என கூறப்படுகிறது. 


மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள்:


மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் ஒருவர் Mastectomy அல்லது lumpectomy எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். Mastectomy என்பது மார்பகத்தை அகற்றும் சிகிச்சையாகும்,  lumpectomy  என்பது மார்பகத்தில் இருக்கும் கட்டியை மற்றும் அகற்றும் சிகிச்சையாகும்.  லம்பெக்டோமிக்குப் பிறகு, கதிர்வீச்சு சிகிச்சை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஹார்மோன் சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை எஞ்சி இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கவும், மீண்டும் வருவதைத் தடுக்கவும் பரிந்துரைக்கப்படுகின்றன.


மார்பக புற்றுநோய் சிகிச்சையின் போது ஒரு பெண்ணின் பாலுணர்வு, கருவுறுதல் மற்றும் கர்ப்பம் பாதிக்கப்படலாம். சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், கட்டாயம் மருத்துவர்களிடம் கேட்டறிய வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடை, மது அருந்துதலை கட்டுப்படுத்துவது, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.