ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி மூளைக்கட்டி (brain tumor) தினமாக அனுசரிக்கப்படுகிறது. சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டியால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதையும், மருந்துகளை கண்டறிவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.


ஜூன் 8 ஆம் தேதி மூளைக்கட்டி தினம் அனுசரிக்கப்படும் நிலையில், சென்னை ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் அன்புசெல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ மூளையில் கட்டி என்றால் மூளையில் இருக்கும் செல்களின் வளர்ச்சி அதிகரிப்பதால் ஏற்படக்கூடியது. சில கட்டிகள் எதிர்மறை ஆற்றல் இல்லாமல் இருக்கும். ஆனால் ஒரு சில கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறும். சில சமயங்களில் உடலின் பிற பாகங்கள் அதாவது மார்பகம், நுரையீரல் அல்லது தொண்டையில் இருக்கும் தைராய்டு மூலம் புற்றுநோய் செல்கள் மூளைக்குச் சென்று மூளைக்கட்டிகள் ஏற்படக்கூடும்.


இந்த பாதிப்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடும். பொதுவாக வாந்தி, மயக்கம், கடுமையான தலைவலி, வலிப்பு, உடல் அசதி போன்ற அறிகுறிகள் இருக்கும். ஒரு சிலருக்கு மிகவும் லேசான அறிகுறிகள் அதாவது மறதி, பேசுவதில் சிக்கல் ஏற்படுவது போன்றவை தென்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.


நோயின் தன்மை குறைவாக இருக்கும் போதே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் நல்ல வாழ்க்கை அந்த நபருக்கு வழங்க முடியும். மூளைக்கட்டிக்கு பொதுவாக அறுவை சிகிச்சை தான் முக்கியமாக வழங்கப்படும். நோயாளிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் மூளையில் இருக்கும் கட்டியை மட்டும் அகற்றலாம். நோயின் தீவிரத்தை பொறுத்து கீமோ அல்லது கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும்.


நோயின் அறிகுறி தென்பட்ட உடனே அது எந்த மாதிரியான கட்டி என்பதை பரிசோதனை செய்து அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோல் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே அறுவை சிகிச்சை, கீமோ, கதிர்வீச்சு ஆகிய மூன்றும் இருக்கும். நல்ல மருத்துவமனையை தேர்ந்தெடுத்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். இந்த நோய் வருவதற்கான காரணங்கள் இதுதான் என இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை.


புகைப்பிடித்தல், குடி பழக்கம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் சில நச்சு புகைகளில் இருந்து விலகி இருப்பது ஆகியவை அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.