வயிற்றுப்பகுதியில் வலி என்று வரும் நோயாளிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கையில் சிலருக்கு பித்த பையில் கற்கள் இருப்பது கண்டறியப்படுவது உண்டு. இதனை Cholelithiasis / Gall bladder stones என்கிறோம். சிலருக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யும் போது எடுக்கும் ஸ்கேனில் பித்த பை கற்கள் இருப்பது தெரியவரும். 


இந்த பித்தபை கற்கள் எதனால் உருவாகின்றன? 


முதலில் பித்த பை எதற்கு இருக்கிறது ? என்பதை அறிந்தால் பித்த பையில் கற்கள் ஏன் தோன்றுகின்றன என்று தெரியும்.


நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்ய இருக்கும் முக்கிய உறுப்பு - *கல்லீரல்*  


இந்த கல்லீரலில் இருந்து சுரக்கும் நொதி - *பித்த நீர்*  


ஒருவர் எப்போதெல்லாம் கொழுப்பை உண்கிறாரோ அப்போது இந்த பித்த நீர் குடலில் கலக்கும். 


கல்லீரலுக்கு பல்வேறு வேலைகள் இருப்பதால் தேவையான பித்தநீரை சேமித்து வைக்கும் கிடங்காக பித்த பையை( gall bladder)  தன்னகத்தே வைத்துள்ளது. 


இந்த பித்த பையில் பித்த நீர் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது சுரக்கும். 


இப்போது யோசியுங்கள்? ஒருவருக்கு எப்போது பித்த பை கற்கள் வரலாம். 


உணவில் கொழுப்பை தினசரி 30 கிராம் அளவு கூட எடுக்காத ஒருவருக்கு பித்த நீருக்கான வேலையே இருக்காது. 


ஆகவே , தொடர்ந்து ஒருவர் 30 கிராமிற்கு கூட கொழுப்பு எடுக்காவிட்டால் அவரது பித்த பையில் பித்த நீர் சேர்ந்து கற்களாக மாறும். 


இந்த பித்த பை கற்களானது ஒருவரது தினசரி தேவையான கலோரிகளுக்கு மிகவும் குறைவாக உணவு உண்ணும் மக்களுக்கும் வருகிறது. 


சிலருக்கு எந்த காரணமும் இன்றியும் இந்த கற்கள் தோன்றலாம். 


சரி.. இவற்றில் ஏதோ காரணத்தால் கற்கள் வந்திருக்கலாம்.. 


கற்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?


பித்த பை கற்கள் 


சோடாவில் கோலியாகவும் இருக்கலாம் 


உள்ளே இருக்கும் டைம் பாமாகவும் இருக்கலாம்..


பலருக்கும் பல வருடங்கள் எந்த தொந்தரவும் தராமல் கற்கள் பித்த பையில் இருக்கின்றன. இது கோலி சோடா வெரைட்டி. எந்த பிரச்சனையும் செய்யாமல் இருக்கும் இந்த கற்களினால் எந்த பிரச்சனையும் இல்லை. 


இன்னும் சிலருக்கு.. 
கொழுப்புணவு எடுக்கும் போது ( உதாரணத்திற்கு தேங்காய்பால் / மட்டன் / முட்டை ) போன்றவை எடுக்கும் போது வயிற்றுப்பகுதியில் வலி ஏற்படும். பின் முதுகுக்கு பரவும் வலியாக இருக்கும்.  
இவர்கள் அனைவரும் டைம் பாம் வெரைட்டி.. 


பித்த பை கற்களில் அப்படி என்ன சிக்கல்? 


பித்த பை கற்கள் உள்ளவர் கொழுப்புணவு சாப்பிடும் போது அவரது பித்த பை பித்த நீரை சுரக்க சுருங்கி விரியும் அப்போது அதற்குள் இருக்கும் கற்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது. 


அப்படி வெளியேறி நேரே குடல் வழி வந்து விட்டால் அவர் அதிர்ஷ்டசாலி . இப்படி ஒரு 25% பேருக்கு நிகழலாம். ஆனால் கண்டிசன் என்னவென்றால் கற்கள் ( 2-4 மில்லி மீட்டர் வரை இருக்க வேண்டும்) அப்போது தான் எளிதாக வெளியேற முடியும். 


இந்த இடம் தான் சிக்கலான இடம்.. 


மதுரையின் கோரிப்பாளையம் சிக்னல் போல எப்போதும் ட்ராஃபிக்காக இருக்கும் அந்த இடத்தில்  
பித்தபையில் இருந்து வரும் குழாயும் , கல்லீரலில் இருந்து வரும் குழாயும் இணைந்து நேரே சென்று கணையத்தில் இருந்து வரும் குழாயுடன் சேர்ந்து குடலில் சேர்க்கும். 


இப்படி முச்சந்தி சேரும் இடத்தில் கற்கள் செல்லும் போது.. 
தெரியாமல் கல்லீரலை நோக்கி சென்றால் பித்த நீர் வெளியேறும் பாதை அடைத்துக் கொண்டு கல்லீரல் பாதிப்படையும். மஞ்சள் காமாலை( Hepatitis)  வரும். இதற்கு 25% வாய்ப்பு உள்ளது


அந்த கற்கள் பித்த பையின் குழாயை அடைத்தால் பித்த பை பாதிப்படையும். இதை cholecystitis என்கிறோம். இதற்கு 25% வாய்ப்பு உள்ளது. 


இந்த கற்கள் அப்படியே சிறிது ரைட் டர்ன் அடித்து கணையத்தில் இருந்து வரும் குழாயை அடைத்தால் கணைய பாதிப்பு வரும் . இதை acute pancreatitis என்கிறோம். 


மேற்சொன்ன மூன்று பிரச்சனைகளிலும் 
கடும் வயிற்று வலி,, கடும் ஜூரம், வாந்தி , வயிற்றுப்போக்கு எற்படும். இவற்றுடன் மஞ்சள் காமாலை வரலாம்.


பித்த பை கற்கள் இருப்போருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றினால் உடனே உணவு உண்பதையும் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தி விட்டு ( Nil per oral)  அறுவை சிகிச்சை நிபுணரிடம் செல்ல வேண்டும். 


பித்த பை கற்களை மட்டும் நீக்குவது கடினம் என்பதாலும்.. மீண்டும் மீண்டும் பித்த பை கற்கள் வரும் வாய்ப்புகள் இருப்பதாலும் பித்த பையுடன் நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதை cholecystectomy என்கிறோம். 


சரி இப்போது இந்த பித்த பை கற்கள் இருப்போர் பேலியோ உணவு முறையை கடைபிடிக்கலாமா என்ற கேள்விக்கு வருவோம் ? 


உங்களுக்கு பித்த பையில் கற்கள் வரக்காரணமாக இருந்தது நீங்கள் சரியான அளவில் கொழுப்பை எடுக்காமல் இருந்தது என்பதை முதலில் உணர வேண்டும். 


இப்போது பேலியோ எனும் கொழுப்புணவை சாப்பிடும் போது உங்கள் பித்த பை  வேலை செய்ய ஆரம்பித்து  சுருங்கி விரியும். இதனால் பித்த பை கற்கள் வெளியேறும் வாய்ப்பு அதிகம். 


நான் முன்னரே கூறியது போல 
கற்கள் சிறிதாக இருந்தால் குடலில் வெளியேறிவிடும் வாய்ப்பு இருக்கிறது 


இதை Gall bladder flushing என்போம். 


ஆனால், இதே கற்கள் சிறிது பெரிதாக இருந்தாலோ அதிகமான கற்கள் இருந்தாலோ கல்லீரல் / பித்த பை/ கணையம் போன்றவற்றின் குழாய்களில் அடைத்துக் கொள்ளவும்  வாய்ப்பு இருக்கிறது. 


ஆகவே பித்த பை கற்கள் இருப்போர் பேலியோ உணவு முறையை கடைபிடிக்கும் போது கவனத்தை கடைபிடிக்க வேண்டும். 


மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்து கொள்வது சாலச்சிறந்தது. 


சரி. பித்த பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியவர்கள் பேலியோ தொடரலாமா?? 


தாராளமாக அறுவை சிகிச்சை செய்த ஒரு மாதம் கழித்து பேலியோவை தொடங்கலாம். 
பித்த பை செய்த பித்தநீரை  சேமிக்கும் வேலையை காலப்போக்கில் கல்லீரலின் குழாயே செய்ய ஆரம்பித்து விடும் ஆதலால் பேலியோவை பிரச்சனையின்றி தொடரலாம். 


காமன் மேன் உணவு முறையில் இருக்கும் எனக்கு பித்த பை கற்கள் வரக்கூடாது என்றால் நான் என்ன செய்ய வேண்டும்? 


தினமும் 30 கிராம் அளவாவது கொழுப்பு எடுக்க வேண்டும். 
இந்த கொழுப்பானது நமது பித்த பையை எப்போதும் ஏக்டிவாக வைத்து கற்கள் தோன்றாத வண்ணம் பாதுகாக்கும். 


நெய் 
வெண்ணெய் 
செக்கில் ஆட்டிய எண்ணெய் 
நட்ஸ் 
வேர்க்கடலை 
பால் 
பனீர் 
மாமிசம் ( தோலுடன்)   
முட்டை போன்றவற்றில் கொழுப்பு இருக்கிறது 


இவற்றை தினசரி உணவில் எடுத்துக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.


நன்மையே!!!


உங்களது பித்த பை கற்கள் 


சோடாவின் கோலியா? 
டைம் பாமா ? 
என்று யாரும் கணிக்க முடியாது என்பதே இதில் உள்ள த்ரில் ஃபேக்டர்.. 


விழிப்புடன் அறிகுறிகளை அறிந்து நடந்தால் பிரச்சனைகளை கட்டாயம் தவிர்க்க முடியும். 
இதுவே இந்த பதிவின் நோக்கம். 


Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் 
சிவகங்கை