சில சமயம் கண்ணாடி முன் நிற்கும் போது சிவந்திருக்கும் நம் கண்களை பார்த்து அதிர்ச்சி அடைந்திருப்போம்! நம் உடலின் ஆரோக்கியத்தைப் போலவே கண்களின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. கண்கள் நம் உடலில் மிகவும் மிருதுவான இடங்களில் முக்கியமானது. அதனால் அதிக பயனும் நாம் அனுபவிக்கிறோம். எனவே அதனை பாதுகாத்தல் நம் தலையாய கடமை ஆகிறது. அதனால் தான் கண்களுக்குள் பொத்தி வைத்து பார்த்துக்கொள்வேன் என்று காதலன் காதலியிடம் கூட கூறுவார்கள். நம்மில் பலர் தங்கள் கண்களை சரியாக கவனிக்காமல், வயதான காலத்தில் கண் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறோம். நம் சமூகத்தில், அதிக அளவிலான எலக்ட்ரானிக் கேஜெட்கள் பயன்பாட்டில் இருப்பதால், நம் கண்கள் தொலைக்காட்சிகள், மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் போன்றவற்றின் திரைகளை அதிக நேரம் பார்க்கவேண்டிய சூழலில் உள்ளன. மிகவும் பொதுவான கண் பிரச்சினைகளில் ஒன்று பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் தான். இது தவிர, பலருக்கு கண்கள் சிவந்து போகும் நிலை ஏற்படும். சிவந்த கண்கள் சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவற்றின் காரணமாக வரலாம், ஆனால் சில சமயங்களில் உடல்நலப் பிரச்சினைகளும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
மெட்ராஸ் ஐ
கான்ஜுன்க்டிவிடிஸ் பிரச்சினை என்று அழைக்கப்படும் இந்த பிரச்சினை நம் கண்களில் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சினையாகும், மேலும் இது கண்கள் சிவப்பதற்கு வழி வகுக்கும். ஒரு மெல்லிய தெளிவான சவ்வு கண்ணை மூடி, கண் இமைகளின் உட்புறத்தை வரிசைப்படுத்தும். இது கான்ஜுன்டிவா என்று அழைக்கப்படும். இந்த சவ்வு வீக்கமடையும் போது அது கண்கள் சிவக்கும். இந்த பிரச்சினையில், கண்ணில் நீர் வருதல், கண் வீக்கம் போன்றவையும் இருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்று
கொரோனா வைரஸ் தொற்றுகள் பெரும்பாலும் நுரையீரலில் ஏற்படும் தொற்றுடன் தொடர்புடையதாக இருந்தாலும், கொரோனாவிற்கு முக்கியமான அறிகுறி கண் சிவத்தல். எனவே அதனை வேறு காரணங்கள் என்று எண்ணிவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.
அலர்ஜி
பெரும்பாலும் அலர்ஜியால் பாதிக்கப்படுவது நமது மூக்குதான். ஆனால் சில நேரங்களில் நம் கண்களும் அலர்ஜிக்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. அலர்ஜியின் ஒரு அறிகுறி கண்கள் சிவப்பதாகும். கண்கள் சிவப்பதற்கு, பூக்களின் மகரந்தம், தூசி, சிறு பூச்சிகள் அல்லது விலங்குகளின் முடிகள் போன்றவற்றின் காரணமாக கூட இருக்கலாம். இவை தவிர, இதோடு கண்களில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வுகள் போன்றவையும் இருக்கலாம்.
காண்டாக்ட் லென்ஸ்
கண்கள் சிவப்பதற்கு நமது காண்டாக்ட் லென்ஸ் கூட காரணமாக இருக்கலாம். கான்டாக்ட் லென்ஸை கரைசல் மூலம் சுத்தம் செய்து, பிறகு பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி, கான்டாக்ட் லென்ஸ் அணியும் போது கைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். லென்ஸ் உடையாமல் கண்ணில் பொறுத்தவேண்டும். இல்லையெனில் இது போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு
கண் வறட்சி
சிலருக்கு, கண்களை உயவூட்டுவதற்கு கண்ணீர் போதுமானதாக இருக்காது. இது கண் சிவத்தல் மற்றும் வறட்சி மற்றும் எரிச்சல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.