இனிப்பான உணவுகளுக்கு ஏன் பேலியோவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவை நல்லதா என்றும் சிவகங்கை பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் விளக்கமாகத் தெரிவித்து உள்ளதாவது:

நம்மில் பலரும் "சீனி கெட்டது " என்று சத்தியம் செய்து கூறுவோம். ஆனால் நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவை இயற்கையானது. ஆகவே அவற்றை உண்டால் நமக்கு பிரச்சனை இல்லை என்ற கருத்தை கொண்டிருக்கின்றோம்.

Continues below advertisement

இது தவறு. சீனி என்பது நாட்டுச் சர்க்கரையின் பாலிஷ் மற்றும் பவுடர் பூசப்பட்ட வடிவம் தான்.  சீனி போட்டு டீ குடிக்காத பல சர்க்கரை வியாதிக்காரர்களும் வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு போட்டு குடிக்கின்றனர்.

இதுவும் தவறு. ஏன்???

சீனி, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு இவை யாவும் பல்வேறு மூலப்பொருட்களில் இருந்து வந்தாலும் அவற்றினுள் இருப்பது சுக்ரோஸ் எனும் மாவுச் சத்தாகும்.

சுக்ரோஸை அளவின்றி உண்டால் நமது கணையத்தின் பீட்டா செல்களை பிழிந்து இன்சுலினை எடுப்பதற்கு ஒப்பாகும். இப்படி அனுதினமும் சுக்ரோஸை முழுப்போடு போட்டால், கணையம் பாதிக்கப்படாமல் என்ன செய்யும்?

நாட்டுச் சர்க்கரை என்பது இயற்கை தானே.. அதை ஏன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள்?

எது இயற்கை?? கரும்பை கரும்பாக உண்பது இயற்கை. ஆனால் அதை சர்க்கரையாக மாற்றி உண்பது இயற்கை அன்று.

ஒருவரால் ஒரு நேரத்தில் எத்தனை முழுக் கரும்புகளை உண்ண முடியும்?

அதிகபட்சம் ஒரு முழு நீள கரும்பை கூட உண்ண முடியாது. ஆனால் அதையே சர்க்கரையாக உண்ண வேண்டுமெனில் எளிதாக உண்டு விடலாம்.

ஒரு கிலோ சீனி/ நாட்டு சர்க்கரை உற்பத்திக்கு பத்து கிலோ கரும்பு தேவைப்படுகிறது. எனவே, சர்க்கரை என்பது செயற்கையானது .

ஒருவருக்கு இனிப்பு தின்ன ஆசையாக இருந்தால் , கரும்பாக அதை தின்பதே இயற்கையானது.

சர்க்கரையாக அதை மாற்றி உண்பது எப்படி இயற்கையாகும்?

 

இதை விட கொடுமையானது குளிர்பானங்கள் மற்றும் சாக்லேட்டுகள்..

மறைமுகமாக பல கிராம் சர்க்கரையை குளிர்பானங்களிலும் சாக்லேட்டுகளிலும் கலந்து விற்கின்றனர்.

தனியாக எட்டு டீஸ்பூன் சீனியை உண்ண யாரும் விரும்பமாட்டார்கள் ஆனால் அதுவே ஒரு கோக்கில் இருந்தால் உடனே பருகிவிடுகிறோம்..

நமது குழந்தைகளுக்கும் அதன் அபாயம் தெரியாமல் வாங்கி கொடுக்கிறோம் . நாம் தெரிந்தே தீங்கு செய்கிறோம்.

மேலும், நாம் உண்ணும் ஒவ்வொரு 100 கிராம் சர்க்கரையிலும் சரிக்குசமமாக 100 கிராம் மாவுச்சத்து (carbohydrates) இருக்கிறது.

இத்தனை அதிகமான மாவுச்சத்து நம்மை ஆரோக்கியமாக இருக்க வழிசெய்யுமா இல்லை நமது உடலுக்கு ஊறு செய்யுமா என்று ஆராயத்தேவையில்லை.

தேன் ஏன் பேலியோவில் பரிந்துரைக்கப்படுவதில்லை??

தேனில் இருப்பது ஃபரக்டோஸ் எனும் மாவுச்சத்து தான். தேனில் பல  மருத்துவ குணங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை ஆனால் தற்போது சந்தையில் கிடைக்கும் தேன்களில் பல போலியானவை.  வெறும் ஃபரக்டோஸ் கார்ன் சிரப்புகளை தேன் என்று பலர் விற்கின்றனர்.

மேலும், தேனை மருந்துக்காக அவ்வப்போது மட்டுமே பயன்படுத்த வேண்டுமே ஒழிய தினமும் இரண்டு ஸ்பூன் பருகி வந்தால் அதுவும் நமது கணையத்தின் பீட்டா செல்களை அதிக அளவு வேலை வாங்கி சிரமத்துக்குள்ளாக்கும்.

ஆகவே , ஃபரக்டொஸ் அதிகமான பழங்கள் , தேன் போன்றவற்றை அதிகம் உண்பது நமது உடலுக்கு நல்லதல்ல. இனிப்பு சுவை என்பது பிற சுவைகளை மட்டுப்படுத்தி நமது நாக்கை அதற்கு மட்டுமே அடிமையாக்க வல்லது. ஆகவே, இனிப்பு சுவையை மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும்.

பழங்கள்

தேன்

வெல்லம்

பனங்கற்கண்டு

என்று இனிப்பு சுவை எந்த ரூபத்தில் வரினும் அதன் நன்மை தீமைகளை உணர்ந்து நமது அன்றாட வாழ்வில் அவற்றை தவிர்த்து வாழ்வது நமக்கு நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.