பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வந்தார். இதன் ஒரு பகுதியாக நவம்பர் 17ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் அவருக்கு முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு (VIVA VOCE Examination) நடைபெற்றது. இறுதியில் External Examiner Dr.S.Thirumalai Kumar (Tamilnadu physical education and Sports University) "முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி" என அறிவித்தார்.
திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் உடற்கல்வியியல் துறை இயக்குநர் முனைவர் பிரசன்ன பாலாஜி வழிகாட்டுதலின் கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடற்கல்வி செயல்பாடுகள் பள்ளிக் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன? கணினிசார் நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கற்றலுக்கு எவ்வாறு உதவுகிறது? என்பதை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது.
மேலும் உடற்கல்வி செயல்பாடுகள் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இயந்திரக் கற்றல் (Machine Learning) தொழில்நுட்பத்தின் மூலம் ஆராயும் வகையிலும் அமைந்தது.
கற்றலுக்கு முடிவே கிடையாது
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது" என எங்கள் திராவிடத் தலைமை ஆசிரியர் முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்!
அதன்படி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021-ஆம் ஆண்டு முதல் "Physical Activity for Skill Development Through Machine Learning" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தேன்.
முனைவர் பட்டம்
அதன் வாய்மொழித் தேர்வு நேற்று (நவம்பர் 17) நடைபெற்றது. அதில் எனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு “முனைவர்” பட்டம் பெற்றுள்ளேன் என்பதைப் பெரு மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், When leaders learn, generations dream bigger!
என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்! “முனைவர்” பட்டம் பெற்றுள்ள தம்பி அன்பில் மகேஸுக்கு வாழ்த்துகள்!
கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எனது சொல்லை, எனது அமைச்சரவையிலும் குடும்பத்திலும் இருந்து கடைப்பிடித்திருக்கிறார் அன்பில் மகேஸ்.
ரோல் மாடல்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றிக் கொண்டே முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், பணிச்சுமை - நேரமின்மை - வயது ஆகியவற்றைக் கடந்து கல்விபெறத் துடிக்கும் அனைவருக்கும் 'Role Model' ஆகிவிட்டார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.