இன்றைய உலகில் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, வேலை அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகிவிட்டது. ஆனால், ஒரு நபரால் எவ்வளவு மன அழுத்தத்தை தான் தாங்கி கொள்ள முடியும். 


சில சமயங்களில் பணியில் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாகி ஒரு கட்டத்தில் மரணத்திற்கு வழிவகுக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் இந்தியாவையே உலுக்கியுள்ளது. புனேவில் 26 வயதான பட்டய கணக்காளர் (Chartered Accountant) அன்னா செபாஸ்டியன் அதீத வேலை அழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கிறார்.


அவரின் மரணத்தை தொடர்ந்து, அவர் பணிபுரிந்து வந்த எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா (E&Y) நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்னா செபாஸ்டியன் உயிரிழந்தார்.


அன்னாவின் தாயார் அனிதா அகஸ்டின், E&Y நிறுவத்தின் இந்தியா தலைவர் ராஜீவ் மேமானிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்துதான், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


பணிச்சுமையால் தனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கடிதத்தில் அன்னாவின் தாயார் குறிப்பிட்டுள்ளார். அடிக்கடி இரவு நேரம் வரை வேலை செய்ததாகவும் சில சமயங்களில் வார இறுதி நாட்களிலும் வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனது மகளின் இறுதிச் சடங்கிற்கு எந்த பணியாளரையும் E&Y நிறுவனம் அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் அன்னாவில் தாயார் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, அண்ணா செபாஸ்டியன் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.


பணிச்சுமையால் ஏற்படும் முதல் உயிரிழப்பா?


இல்லை. வேலை அழுத்தத்தால் ஒருவர் உயிரிழப்பது முதல்முறையாக நடப்பது அல்ல. இதற்கு முன், பீகார், உ.பி., தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் தற்கொலை செய்துள்ளனர்.


இந்த ஆண்டு, மே மாதம், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேலை அழுத்தம் அதிகமாக உள்ளது என்றும் தான் வீடு திரும்ப மாட்டேன் என்றும் இறப்பதற்கு முன் அக்காவிடம் போனில் கூறிவிட்டு, ஹிமான்சு தற்கொலை செய்து கொண்டார்.


இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உ.பி.யில் உள்ள எட்டாவில் போஸ்ட் மாஸ்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை அழுத்தம் காரணமாக மனமுடைந்தார் என்றும் வேலை செய்ய விரும்பவில்லை என அடிக்கடி கூறுவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் வேலை கிடைத்தது.


மன அழுத்தம் நம்மை எவ்வாறு பாதிக்கிறது?


வேலை அழுத்தம் என்பது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தீவிர பிரச்சனையாகும். மன அழுத்த சகிப்புத்தன்மை என்பது ஒரு நபர் சகித்துக்கொள்ளக்கூடிய மன அழுத்தத்தின் அளவைக் குறிக்கிறது.


இந்தியாவில் வேலை அழுத்தம் அதிகரித்து வருவது பெரும் பிரச்னையாக உள்ளது. இது பெரும்பாலான மக்களை பாதிக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வேலை அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


ஒருவர் வாரத்திற்கு 48 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்றும் ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகள் கூறுகின்றன. இந்தியாவில் வெவ்வேறு வேலைகளுக்கு வெவ்வேறு விதிகள் உள்ளன.


தொழிற்சாலைகள் சட்டம் 1948 இன் படி, ஒரு தொழிற்சாலையில் வேலை நேரம் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளியும் அரை மணி நேர இடைவெளியைப் பெற வேண்டும். வேலையைத் தொடங்கிய 5 மணி நேரத்திற்குப் பிறகு இடைவெளியை எடுக்க வேண்டும். ஒரு வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய கூடாது.


எச்சரிக்கும் மருத்துவர்கள்:


இதுகுறித்து உளவியல் நிபுணரும் மருத்துவருமான ஜினி கே. கோபிநாத் நம்மிடம் பேசுகையில், "பெரும்பாலான ஊழியர்களாக 8 மணி நேரத்திற்கு நன்றாக வேலை செய்ய முடியும். ஆனால், அதிக நேரம் வேலை செய்வதால் தெளிவாக சிந்திக்கவும் ஆக்கப்பூர்வமாகவும் கடினமாக இருக்கும்.


வேலைக்கு இடையில் இடைவெளியும் அவசியம். ஓய்வு எடுப்பது கவனம் செலுத்துவதற்கும் நன்றாக உணருவதற்கும் உதவுகிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் வேலை செய்கிறார்கள். எனவே, மக்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.


நீண்ட வேலை நேரம், பரபரப்பான பணி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதைத் தாண்டி நிறுவனங்கள் நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாறாக, ஊழியர்களிடம் அவர்கள் அனுதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பணியாளர்களுக்கு அவர்களின் மனநலம் குறித்து விவாதிக்க பாதுகாப்பான இடம் வழங்கப்பட வேண்டும்" என்றார்.