டெல்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமானமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கோபால் ராய், இம்ரான் ஹுசைன், கைலாஷ் கெலாட், சௌரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


முதல்முறை எம்எல்ஏவாக உள்ள முகேஷ் அஹ்லாவத்தும் அமைச்சராக பதவியேற்று கொண்டார். பாஜகவின் சுஷ்மா சுவராஜ் மற்றும் காங்கிரஸின் ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் அதிஷி ஆவார்.


டெல்லி அரசியலில் மாற்றம்:


செப்டம்பர் 26-27 தேதிகளில் நடைபெறும் சிறப்பு அமர்வில் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் அவர் தனது அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமாக பதவி வகித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வந்தார்.


இவருக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது. எனினும் தலைமைச் செயலகம் செல்லக் கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், எந்த கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருந்தது.


 






மூன்றாவது பெண் முதலமைச்சர்:


இதனால், பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறைக்குச் செல்லும்போது கூட முதல்வர் பதவியைத் துறக்காத அர்விந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளியில் வந்தபிறகு, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது.


இதைத் தொடர்ந்து, அதிஷியை புதிய முதலமைச்சராக கெஜ்ரிவால் அறிவித்தார். கெஜ்ரிவால் அரசில் பல முக்கிய துறைகளை கவனித்து வந்த அதிஷி, ஆம் ஆத்மி சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழலில், இன்று பதவியேற்பு நடைபெற்றுள்ளது.


டெல்லியின் இளம் முதலமைச்சர் என்ற பெருமை அதிஷியை சாரும். அதோடு, நாட்டின் 17ஆவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் அவரையே யாரும்.