நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது இறப்புக்கு புறாக்களின் எச்சங்களால் வரக்கூடிய நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமைதிக்கு பெயர்போன புறாக்களால் ஆபத்து உண்டு என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.


சைலண்ட் ஆனா வயலண்ட்:


பொதுவாக பறவைகளிலேயே மிகவும் சாதுவானவற்றில் புறாவும் ஒன்று. மனிதர்களால் விரும்பப்படுவதும், வீட்டில் வைத்து வளர்க்கப்படும் பறவையும் கூட. உயர்ந்த கட்டடங்கள், கோயில் கோபுரங்கள் உள்ளிட்டவற்றில் புறாக்களை எளிதாகப் பார்க்கமுடியும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக அளவில் புறாக்களை பார்க்க முடியும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் புறாக்களால், சைலண்ட்டாக மனிதர்களின் உயிருக்கே வேட்டு வைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம். புறாக்களால் மனிதர்களின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்க முடியும் என்று சொல்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.




நுரையீரலை பாதிக்கும் புறா எச்சம்:


புறா உள்ளிட்ட பறவைகளால் 50க்கும் மேற்பட்ட நோய்களை மனிதனுக்கு பரப்ப முடியுமாம். அதில் சில நோய்கள் மனிதனின் உயிருக்கே ஊறு விளைவிப்பவை. அப்படி புறாக்களால் பரப்பப்படும் நோய்களில் ஒன்று தான் pigeon fanciers lung. புறாக்கள் பொதுவாக எந்த இடத்தில் கூட்டமாக வாழும் என்றால், எங்கு அதற்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவைகள் எளிதாக கிடைக்குமோ அங்கு வாழும். புறாக்கள் வாழும் இடங்களில் அதன் எச்சங்கள் ஓரிடத்தில் அதிகமாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். நாம் புறா எச்சம் தானே என்று சாதாரணமாக கடந்து சென்றிருப்போம். ஆனால் அது தான் நம் உயிருக்கே வேட்டு வைக்கும் என்பது நாம் அறியாதது. புறாக்களுடன் நேரடித் தொடர்பு, அதன் எச்சங்கள் விழுந்த தண்ணீர், அவைகளுடன் தொடர்புடைய உணவுகள் மற்றும் அவைகளின் எச்சங்கள் இருக்கும் இடத்தில் அதிகம் புழங்குவது உள்ளிட்ட காரணங்களால் நமது நுரையீரல் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகக் காரணம், இந்த நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலம் பரவும் என்பதால் தான். மற்ற பறவைகளைக் காட்டிலும் புறாவின் எச்சங்கள் மனிதர்களுக்கு கடுமையான அலர்ஜியை உருவாக்கும். அதுமட்டுமல்லாமல், அஸ்பெர்ஜில்லோசிஸ் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை பரப்பும் தன்மை கொண்டவை. இவைகள் சர்க்கரை வியாதி, நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு கொண்டவர்களை எளிதில் பாதிக்கும்.


புறா பரப்பும் நோய்கள்:


புறாக்களின் எச்சங்கள் அதிக அசிடிக் தன்மையைக் கொண்டவை. அதனால் அதில் உள்ள விஷத்தன்மை காற்றில் எளிதில் பரவும். இது ஆஸ்துமா நோயாளிகளை அதன் தன்மையை மேலும் தீவிரமாக்கும். புறாக்களால் பல்வேறு நுரையீரல் தொடர்பான நோய்கள் உண்டாகும். ப்ரோன்ஸியல் ஆஸ்துமா, க்ரோனிக் ப்ரோன்சிடிஸ், ஹைப்பர்சென்சிடிவிட்டி நிமோனிடிஸ், ஹிஸ்டோப்ளாஸ்மாஸிஸ், அஸ்பெர்ஜில்லோஸிஸ், ப்ஸிட்டகாஸிஸ், சல்மோனெல்லா மற்றும் க்ரிப்டோகக்காஸிஸ் போன்ற நுரையீரல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். 




இதில் மிகவும் மோசமானது என்றால் Bird Fancier's flu தான். இது ஹைப்பர்சென்சிடிவிட்டி நிமோனிட்டிஸ் வகையைச் சார்ந்தது. இது தீவிர அலர்ஜியை உருவாக்கக் கூடியது. பறவைகளின் இறக்கைகள் மற்றும் காய்ந்த பறவை எச்சங்கள் மூலம் பறவக்கூடியது.


இதன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டால் இருமல், சுவாசப்பிரச்சனைகள், மூச்சுவாங்குதல், உள்ளிட்டவைகள் உருவாகும். இதனை சரிசெய்ய முடியாத அளவிற்கான நீண்ட நாள்கள் அதனுடன் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளும். 


ஹைப்பர்சென்சிடிவிட்டி நிமோடிட்டிஸை ஆரம்ப கட்டத்திலேயே பார்த்து சரி செய்யாவிட்டால் அது உயிரிழப்பு வரை கொண்டு செல்லும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.




எப்படி தவிர்ப்பது?:


இந்த பிரச்சனைகளில் இருந்து தப்ப பறவைகளுக்கு குடியிருப்பு அருகே உணவு கொடுப்பதை தவிர்த்தல், குடியிருப்புகளில், அலுவலகக் கட்டிடங்களில் புறாக்கள் வாழ்வதை தடுத்தல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் பறவைகள் வளர்ப்பதை தவிர்த்தல் போன்றவைகளை செய்வதன் மூலம் இதில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.