தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசு அப்புறம் தான் இனிப்பு. புத்தாடை கட்டிக்கிட்டு பட்டாசு வெடிக்கப் பிடிக்காதவர்கள் குறைவுதான். ஆனால் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் காற்று மாசுபாட்டால் பச்சிளங் குழந்தைகளும், இளம் பிள்ளைகளும் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகலாம் என்று எச்சரிக்கும் நிபுணர்கள் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் டிப்ஸும் வழங்கியுள்ளனர்.


இதோ சில டிப்ஸ்:


தீபாவளி நெருங்க, நெருங்க பட்டாசு விற்பனை ஜோராக, இன்னொருபுறம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாசு கட்டுப்பாடு பற்றி வலியுறுத்தி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனமானது உலகில் 90% குழந்தைகள் நச்சுத் தன்மை கலந்த காற்றைத்தான் அன்றாடம் சுவாசிக்கின்றனர். மாசுபட்டை காற்றை சுவாசிக்கும் கர்ப்பிணிகள் குறைப் பிரசவத்தில் குழந்தை பெறுகின்றனர். காற்றுமாசு நரம்பு மண்டலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி குழந்தைகளில் புற்றுநோய் உருவாக வழிவகுக்கிறது. எனவே, காற்றுமாசுபாட்டில் இருந்து கர்ப்பிணிகள் குழந்தைகளைப் பாதுகாப்பது அவசியம். புகைபிடிப்பவர்கள் அருகில் நின்றால் நாம் பேஸிவ் ஸ்மோக்கர் என்பதை மறந்துவிடாதீர்கள். வீடுகளில் தேவைப்பட்டால் ஏர் ப்யூரிஃபையர் வைத்துக் கொள்ளலாம்.


புதிதாக பிறந்த குழந்தையானாலும் சரி, சிறு பிள்ளைகளாக இருந்தாலும் சரி, காற்று மாசு அதிகம் இருக்கும் போது நிறைய தண்ணீர் அருந்தி உடலை நன்றாக நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 7 டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும். பச்சிளங் குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் காற்றுமாசு நிறைந்த இடத்தில் உள்ள தாய்மார்கள் தங்கள் உடல்நலனை நன்றாகப் பேண வேண்டும். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்க மஞ்சள், பேஸில், தேன் ஆகியனவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிவது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


இந்நிலையில் டெல்லி, தமிழ்நாடு எனப் பல்வேறு மாநிலங்களும் இந்த தீபாவளியில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பலவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.


டெல்லியில் தடை:


டெல்லியில் தீபாவளி பண்டிகையை தினத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டள்ளது.  டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “ தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பட்டாசு வெடித்தால் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும்.


டெல்லியில் பட்டாசு தயாரித்தல், பட்டாசுகளை விற்பனை செய்தல் மற்றும் பட்டாசுகளை வைத்திருந்தாலும் தண்டனைக்குரிய விஷயம் ஆகும். அவ்வாறு பிடிபட்டால் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சட்டப்பிரிவு 9 பியின் கீழ் விதிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு 2023ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை முழுமையான தடை செப்டம்பர் மாதம் மீண்டும் விதிக்கப்பட்டது.


தமிழக அரசு கெடுபிடி:
உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால் இந்த குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும். சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 80-ன்படி, பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.


மேலும், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ பயன்படுத்துவதோ( வெடிப்பதோ) கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது.