சித்தர்கள், ”ஆவாரை பூத்திருக்க சாவாரை காண்பதுண்டோ” என்றார்கள். இதன் விளக்கம் சாராயம், பிராந்தி போன்ற போதைப் பழக்கத்தினால் உடலில் சோர்வு ஏற்பட்டு அதன் காரணமாக கல்லீரல் வீங்கியோ அல்லது கல்லீரல் பாதிப்போ ஏற்பட்டு ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட முடியவில்லை என்றால் ஆவாரம் பூவை காயவைத்து இடித்து சன்னமாக சல்லித்து கால் டீஸ்பூன் பவுடரை சுடுபாலில் சேர்த்து அருந்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை சேர்க்காமலும், சர்க்கரைநோய் இல்லாதவர்கள் பாலில் சர்க்கரை சேர்த்து ஆவாரம்பூ பவுடரை நன்கு கலந்து குடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி தொடர்ந்து 21 நாள் அல்லது 48 நாள் சாப்பிட்டால் ரத்தத்திலிருந்து சாராயம், பிராந்தி போன்றவற்றால் ஏற்பட்ட நோய் நீங்கி உடல் பாதிப்பு நன்றாக மாறும்.
சர்க்கரை நோய்க்குச் சித்தமருத்துவம் பதிவு செய்து வைத்துள்ள ஒரே மூலிகை ‘ஆவாரை’ மட்டும்தான். சர்க்கரை நோயை குணமாக்குவதாகச் சொல்லப்படும் மூலிகைகள் துணை மருந்துகள்தானே தவிர, அவை சர்க்கரை நோய்க்கு மருந்தாகாது. ஆவாரையின் இலை, பூ, காய், வேர், பட்டை என அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயனுள்ளவைதான். இவை ஐந்தையும் சேர்த்துப் பயன்படுத்துவதை ஆவாரைப் பஞ்சாங்கம் என்பார்கள்.
ஆவாரைப் பஞ்சாங்கத்துடன் கொன்றைப்பட்டை, நாவல்பட்டை, மருதம்பட்டை, கடலழிஞ்சிப் பட்டை, கோரைக் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து, அதனுடன் 4 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றிச் சூடாக்கி 1 லிட்டராக வற்றவைத்து வடிகட்டி 4 வேளை குடித்து வந்தால் சர்க்கரைநோய்க்கு பலன் அளிக்கும் எனவும் நம்பப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளது எனக் கணித்துவிட்டு மருத்துவம் மேற்கொள்ள வரும் நோயாளிகளிடம் இந்த ஆவாரைக் குடிநீரை மூன்று மாதங்கள் வரை குடிக்கக்கொடுத்து, முற்றிலும் குணமாவதை அனுபவத்தில் பார்த்து வருகிறோம். ’கிரீன் டீ’ என்ற பெயரில் நாம் பருகி வரும் தேநீரை விட ஆயிரம் மடங்கு அற்புதமானது இந்த ஆவாரைக் குடிநீர்.
ஆவாரம் பட்டையை காய வைத்து இடித்து, சன்னமாக சலித்து சூரணமாக்கி வைத்துக்கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் பவுடரை நான்கு டம்ளர் தண்ணீரில்போட்டு அத்தண்ணீரை ஒரு டம்ளராக சுண்ட கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி இளம் சூட்டில் வாய் கொப்பளிக்க பல் இறுகி கெட்டியாகும்.
ஆடுகின்ற பற்கள் ஆடாது, சொத்தை விழுந்த பற்களில் வலி உண்டானால் அந்த வலி உடனே நிற்கும் எனவும் சொல்லப்படுகிறது. பல் ஈறுகளில் வீக்கம் இருந்தாலோ அல்லது பற்களின் ஈறுகளில் சீழ்பிடித்திருந்தாலும் இந்த நீரால் வாய் கொப்பளித்தால் இந்நோய்கள் நீங்கும்.
ஆவாரம் வேர் பட்டை ஐம்பது கிராம் பச்சையாகக் கொண்டுவந்து ஒன்றிரண்டாக இடித்து எட்டு டம்ளர் தண்ணீர் வைத்து இரண்டு டம்ளராக சுண்ட கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கசாயத்தை இருநூறு மில்லியும், வெள்ளாட்டு பால் இருநூறு மில்லியும், நல்லெண்ணெய் இருநூறு மில்லியுமாக மூன்றையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கூட்டி அடுப்பில் ஏற்றி சிறுதீயாக எரித்து வந்தால் கசாயமும், பாலும் சுண்டிய பிறகு எண்ணெய் மட்டும் இருக்கும். அந்த எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு, தோல் நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை இந்த எண்ணெயில் கால் டீஸ்பூன் தலைக்கு தேய்த்துக்கொண்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.