உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் உணவுகளில் இருந்து விலகியிருக்கும் சூழல் தற்போது ட்ரெண்ட் ஆக மாறி வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிகளவிலான உப்பு, சர்க்கரை, கார்போஹைட்ரேட் வகை உணவுகள் ஆகியவற்றை உண்பதால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
அன்றாட உணவுப் பழக்கங்களில் இதய நோய்களை ஏற்படுத்தும் உணவுப் பொருள்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம்..
1. சர்க்கரை அதிகமான தானிய வகைகள்
சமமான சத்துகளோடு இருப்பது போல உங்களின் காலை உணவுப் பழக்கம் தோன்றினாலும், சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படும் தானியங்கள் உடல்நலத்திற்குக் கேடானவை. மேலும், காலையிலேயே அதிகமான கார்போஹைட்ரேட், சர்க்கரை முதலானவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது தசைகளில் வீக்கம் ஏற்படுத்துவதோடு, நாள் முழுவதும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை மேலும் உண்ணத் தூண்டும்.
2. ஃபிரெஷ் ஜூஸ்கள்
கோடைக் காலத்தில் நாம் அதிகமாக ஃபிரெஷ் ஜூஸ்களைக் குடித்தாலும், பலரும் அதனை சர்க்கரையோடு பருகுகின்றனர். இதனால் தீங்கு விளையும் என்பதால், வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஜூஸ்கள் மட்டுமே சிறந்தவை.
3. சைனீஸ் உணவுகள்
சைனீஸ் உணவுகளை இரவு நேர உணவுகளாக உண்ணும் வழக்கம் பலரிடையே இருக்கிறது. எனினும், ஃப்ரைட் ரைஸ், அதன் சைட் டிஷ்கள் முதலானவை அதிகமான உப்பு, சர்க்கரை, கொழுப்புச் சத்து ஆகியவற்றோடு இருப்பதால் இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு ஏற்படலாம்.
4. உருளைக் கிழங்கு சிப்ஸ்
தொலைக்காட்சி பார்க்கும் போதோ, பொழுதைப் போக்கவோ உருளைக் கிழங்கு சிப்ஸை உண்ணும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. உருளைக் கிழங்கு சிப்ஸ் கலோரிகள் அதிகம் கொண்ட உணவு. மேலும், அதில் சோடியம், கொழுப்புச் சத்து ஆகியவை இருப்பதால், இதய பாதிப்பை ஏற்படுத்துவதாக மாறி விடுகிறது.
5. கெட்சப் வகைகள்
சமோசா, ஃப்ரைட் ரைஸ், ஃபிரென்ச் ஃப்ரைஸ் முதலானவற்றோடு நாம் சாப்பிடும் கெட்சப் அல்லது தக்காளி சாஸ் என்பது சோடியம் நிறைந்த உணவாக இருப்பதால் அதனால் அதிக தீங்கு விளைகிறது.
6. வெள்ளை பிரட்
வழக்கமான வெள்ளை பிரட் சாப்பிடுவது உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் ஆகியவை ஏற்பட காரணமாக அமைகிறது. மேலும், அது உடனே செரிமானம் ஆகிவிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகிறது. இதில் உள்ள ஸ்டார்ச் என்னும் வேதிப்பொருள் காரணமாக வயிற்று உபாதைகளும் ஏற்படுகின்றன.
இந்த உணவுகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் பட்டியலில் இடம்பெறுகின்றன. இவற்றைத் தினமும் உண்டு வந்தால், இதனால் மாரடைப்பு, இதயப் பிரச்னைகள் முதலானவை ஏற்படலாம். எனவே இவற்றைத் தவிர்ப்பதும், அளவோடு சாப்பிடுவதும் நன்று.