மழை, குளிர் ஜில்லென்று என்ற சூழ்நிலையை மாற்றினாலும், மழை சீசனில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதற்கேற்றவாறு உணவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை டயட்டில் சேர்த்துகொள்ள வேண்டும்.


இனி தினமும் தூரலும், தென்றலும் அதற்கேற்றவாறு சூடான பஜ்ஜி, டீ என மனம் அவற்றில் லயித்தபடி இருக்கும். ஆனால், மழையோடு வெள்ள நீர், தேங்கும் மழைநீர் போன்ற சூழலும் சேர்ந்தே இருக்கும். மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை பற்றி இங்கே காணலாம். 


மழைக்காலம் வருவதற்கு முன்பே வீட்டை சுத்தம் செய்து கொள்ளலாம். திரைச்சீலைகள், மிதியடிகள் போன்றவற்றை சுத்தம் செய்து கொள்ளலாம். ஏனெனில், கடினமான பொருட்களை வெயிலில் உலர்த்துவது கடினமானதாகிவிடும். 


வீடுகளுக்கு அருகில், சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். குளியலறை, கழிவறை ஆகியவற்றை அதிக ஈரம் இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். மின்சாதன பொருட்களில் பழுது இருந்தால் அதை சரிசெய்துகொள்ளலாம். எனவே, மின்கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம். குடை, ரெயின்கோட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும். கால்களில் அதிகநேரம் ஈரம் இல்லாமல் பார்த்துகொள்ளவும்.


ஏனெனில், ஈரப்பதம் அதிகம் இருந்தால் பூஞ்சை ஏற்படும் வாய்ப்புள்ளது. வெளியே சென்றுவிட்டு வீடுகளுக்கு வரும்போது கால்களை சுத்தம் செய்வது நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். 


சாப்பிடும் உணவில் கவனம்:


பருவமழையில் உணவு மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது முக்கியம். பருவமழை காலத்தில் சில நோய்கள் பரவல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். 


பருவமழை காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உணவுகள் மூலம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை பரிந்துரைகள் பற்றி காணலாம்.  


பருவமழை காலத்தின்போது பின்பற்ற வேண்டிய சில எளிய மற்றும் பயனுள்ள முன்னெச்சரிக்கைகளை வழிமுறைகள்



  • உணவு சமைப்பதற்கு சந்தையில் இருந்து வாங்கி வரும் காய், இறைச்சி ஆகியவற்றை நன்றாக கழுவ வேண்டும். சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • உங்களையும் உங்கள் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருங்கள் என்று FSSAI அறிவுறுத்துகிறது.

  • சமைப்பதற்கு முன்பும் சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் தொற்று பரவல் தடுக்கப்படும்.

  • சமையலுக்கு சுத்தமான தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும். வடிகட்டப்படாத அல்லது குழாய் நீரை உபயோகிக்க கூடாது. இது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

  • எப்பொழுதும் புதிதாக சமைத்த உணவை சாப்பிட வேண்டும். உங்களுக்கு தேவையான அளவு மட்டுமே சமைக்கவும். அதிகமாக இருந்தால் அதை சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கலாம். அந்த உணவு மூலம் நோய் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், கூடுதல் அளவு உணவுகளை சமைப்பதைத் தவிர்க்கவும்.

  • உணவில் நுண்ணுயிர் வளர்ச்சியைத் தவிர்க்க மீதமுள்ள உணவை ஆறியதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

  • கூடுதலாக சமைத்த உணவை சாப்பிடும்போது, அதை ஃப்ரிட்ஜ் இருந்து எடுத்து சூடுபடுத்தி உண்ண வேண்டும். சூப், சாம்பார் போன்ற உணவுகளாக இருப்பின் அதை நன்றாக கொதிக்க வைத்து சாப்பிட வேண்டும். 

  • இருப்பினும், ஃப்ரிட்ஜில் வைத்து உண்வுகளை சாப்பிட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்ப்பட்டுள்ளது. தேவையான அளவு மட்டுமே உணவு தயாரித்து சாப்பிடுவது நல்லது.

  •  பால், தயிர் போன்ற எப்போதும் பயன்படுத்தியதும் உடனடியாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

  • புதிய மற்றும் உள்ளூர் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். பருவகால உணவுகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

  • மிளகு, பூண்டு, இஞ்சி, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

  •  மழைக்கால நோய்களைத் தவிர்க்கவும் மூலிகைப் பொருட்கள் உதவுகின்றன. ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சுலைமானி  ட்ரிங் குடிக்கலாம்.