உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி என்பது தற்போதைய காலகட்டத்தில் மனித உடலுக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது. உடல் சரியில்லை என  மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் முதலில் கூறும் அறிவுரை நடைபயிற்சி செல்ல வேண்டும் என்பதே ஆகும். 


ஆரம்ப காலங்களில் போக்குவரத்து வசதி இல்லாத காலத்திலும் கூட மக்கள் நடந்து சென்று தான் நமது தேவைகளை நிறைவேற்றினர். ஆனால் தற்போது போக்குவரத்துக்கு என சைக்கிள், பைக், கார்,பஸ் என சொகுசு வாழ்க்கைக்கு பழகி மனித உடலானது அதன் தன்மையை இழந்து நிற்கிறது. வியர்வை சிந்தும் அளவுக்கு நடை பயிற்சி செல்வது என்பது தற்போது மிகவும் குறைந்து விட்டது.


உடலில் பிபி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடல் பருமன் என இவை ஏதேனும் ஒன்று அதிகமாக காட்டினால் மட்டுமே மருத்துவரின் அறிவுரையின் பெயரில் தற்போதைய காலகட்டத்தில் நடை பயிற்சிக்காக செல்கின்றனர். நாள்தோறும் காலையிலோ அல்லது மாலையிலோ நாம் நடைபயிற்சி சென்றால் தொப்பை பெருமளவு குறைவதோடு இடுப்பளவும் குறையும் என சொல்லப்படுகிறது. இதனால் உடல் சீராகி  ஆயுள் ஆரோக்கியம் கூடும் என சொல்லப்படுகிறது.


தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஒருவர் நடைபயிற்சியை சென்றால் மட்டுமே ஓரளவு உடலுக்கு நன்மை கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  நடைபயிற்சி உடலையும், மனதையும்,  ஜீரண உறுப்புகளையும் ஆரோக்கியமாகவும் வைத்து, இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதேபோல் தினமும் நடைப்பயிற்சி செல்வதால் இதய நோய்கள் , பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவு எனவும்,  வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக  ஆய்வுகளும் கூறுகின்றன.
 
நாள்தோறும் நடைப்பயிற்சியின் போது நேரான பாதையில் செல்வதை விட, ஒரு சாய்வான பாதையில் செல்வது உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும் கூறப்படுகிறது. உடல் பருமன் கொண்டவர்கள் நாள்தோறும் ஓரளவு வேகமான நடை பயிற்சி உடன் உடற்பயிற்சிகளை செய்தால் கலோரிகள் உடம்பிலிருந்து வெளியேறி உடல் பருமன் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.


நடைபயிற்சியின் நன்மைகள் :


கலோரிகளை இழக்கச் செய்யும்:


நடைபயிற்சி கலோரிகளை எரித்து எடை குறைக்க உதவுகிறது. நடைப்பயிற்சியின் போது சாதாரணமாக நடந்து செல்வதை விட ,விறுவிறுப்பான நடை நன்கு பலனைத் தரும். அதேபோல் ஒரு சரிவான பாதை அல்லது மலையில் நீங்கள் நாள்தோறும் ஏறி இறங்கினால் அதிக கலோரிகள் உடலில் இருந்து எரிக்கப்படும். இந்த  நடைப்பயிற்சி  கால்களின் தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும்  ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுதல் பிற உடற்பயிற்சிகள் செய்யும்போது உடல் நன்கு வலுப்பெறும்.
 


இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : 


தினமும் 30 நிமிடம்  நடைப்பயிற்சி செய்வதன் மூலம், இதய நோய் வரும் அபாயம் குறையும் என கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு அதிக நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால்  இதயத்திற்கும் , ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை பயக்கும்.



இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும்: 


 வழக்கமான நடைப்பயிற்சி உடலில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்க நீரிழிவு சங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி,   உணவுக்குப் பிறகு நடப்பது கட்டாயம் சொல்லப்படுகிறது.


ஆற்றலை அதிகரிக்கிறது: 


உடலில் ஆற்றலை அதிகரிக்க வழக்கமாக அருந்தும் காபியை தவிர்த்து விட்டு, அதற்கு பதிலாக வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ சிறியதாக நடைபயிற்சியை செய்யலாம் என அறிவுறுத்தப்படுகிறது. உடல் சோர்வாக இருக்கும் போது நடை பயிற்சி மேற்கொள்வது சுறுசுறுப்பை அதிகப்படுத்தும் என சொல்லப்படுகிறது. நடைபயிற்சியின் போது உடலில் ஆக்ஸிஜன் ஓட்டம் மற்றும் கார்டிசோல், எபிநெஃப்ரின் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற ஆற்றல் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது.


உடல் சோர்வாக அல்லது தூக்கத்தில் இருக்கும் போது உங்கள் ஆற்றலை அதிகரிப்பதில் நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


நல்ல சிந்தனை ஏற்படுகிறது:


நாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மனநல பிரச்சனைகள், டென்ஷன் ,ஸ்ட்ரெஸ், மறைமுக எண்ணங்கள் போன்றன சரியாகிவிடும்‌. நடை பயிற்சியின் போது உடல் முழுவதும் புத்துணர்வு பெறுவதால் அது உங்களை தெளிவாக சிந்திக்க அனுமதிக்கிறது. நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய் களின் வளர்ச்சியையும் தடுக்கும்


ஆகவே தினம் தோறும் நடைப்பயிற்சியை மேற்கொண்டு  உடலை  நல்ல ஆயுள் ஆரோக்கியத்தோடு சுறுசுறுப்புடன் வைத்துக் கொண்டால் நோயற்ற வாழ்வு வாழலாம்.