தொலைபேசிகளில் அதிக நேரம் செலவழிக்கும் சிறுவயதினர், தங்கள் நினைவாற்றல் மற்றும் பிற திறன்களில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காலம் செல்போன் அதுவரை பயன்படுத்திடாத குழந்தைக்கும் கூட ஆன்லைன் கல்வி என்ற முறை கையில் செல்போனை திணித்துவிட்டது. குழந்தைகளின் ஸ்க்ரீன் நேரம் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரித்துவிட்டது. இதிலிருந்து விடுபட குழந்தைகள் திணறி வருகின்றனர். ஸ்க்ரீன் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கென்று சில யோகாக்கள் உள்ளன. அவற்றை குழந்தைகள் மட்டுமல்ல அதிக நேரம் கணினி திரை பார்த்து பணியாற்றும் பெரியவர்களும் கூட பின்பற்றலாம்.
கண்களுக்கு ஒத்தடம்
கண்களுக்கு ஒத்தடம் என்றவுடன் ஐஸ் ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம் என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் உள்ளங்கைகளை நன்றாக உரசுங்கள். அந்த சூட்டை கண்களின் மீது ஒத்தடம் கொடுங்கள். ஆனால் கண்களை அழுத்தவோ தேய்க்கவோ கூடாது.
முன்பக்கம் கவிழ்ந்து தரையைத் தொடுதல்
ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்ட முன் பக்கமாக சாய்ந்து கவிழ்ந்து கைகளால் தரையைத் தொடவும். உங்கள் தலை பாரம் முன்னால் வந்து உங்களால் உணர முடியும் அளவுக்கு கவிழ்ந்து கொள்ளவும். நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு கைகளை தலைக்கு மேல் உயர்த்துங்கள்.
ஸ்டாண்ட் அண்ட் ஸ்ட்ரெட்ச்
நேராக நின்று கொண்டு இரண்டு கால்களையும் சற்றே அகற்றுங்கள். கால்கள் ஒவ்வொன்றும் பக்கவாட்டில் நேரதிரே இருக்க வேஎண்டும். பின்னர் கைகள் இரண்டையும் நேராக தூக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னர் குதிங்காலை மேலே உயர்த்தி நில்லுங்கள். 6 முதல் 10 விநாடிகள் அவ்வாறு செய்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுங்கள்.
சீட்டட் கேட் கவ் நிலை:
நாற்காலியில் அமர்ந்து, இரண்டு கால்களையும் தரையில் வைக்கவும். உங்கள் கைகளை உங்கள் முழங்கால்கள் அல்லது உங்கள் தொடைகளின் மேல் வைக்கவும். மூச்சைஉள்ளிழுக்கும்போது, உங்கள் முதுகெலும்பை வளைத்து, உங்கள் தோள்களை கீழே மற்றும் பின்புறமாக இழுக்கவும். நெஞ்சையும், தலையையும் முன்னால் தள்ளவும்.
சமதா முத்ரா
கைகளில் அனைத்து விரல்களையும் ஒன்றாகக் குவியுங்கள். பின்னர் கண்களை மூடிக் கொண்டு அந்த குவித்த விரல்களை கண்ணின் மீது வையுங்கள். ஐந்து முதல் 7 நிமிடங்கள் வரை கண்களை மூடிய வண்ணம் முத்ராவை பிடித்தவாறு அமருங்கள். இது உங்களுக்கு உடனடி ரிலீஃப் தரும்.
உங்கள் குழந்தைகளின் மொபைல் பயன்பாட்டு நேரத்தை குறைக்க முயற்சிக்கும் போது, நீங்கள் அவர்களிடம் இருந்து கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே, பெற்றோர்கள் தங்கள் திரை நேரத்தை முதலில் குறைக்க வேண்டும். பின்னர் அதே பழக்கத்தை தங்கள் குழந்தைகளிலும் வளர்க்க வேண்டியது இன்னும் முக்கியமானது.