பால் ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும் அது ஒரு யுனிவர்சல் உணவாக இருந்தாலும் பிறந்த குழந்தை முதல் பழுத்த முதியவர் வரை அனைவருக்கும் உகந்த உணவாக இருந்தாலும் கூட பாலை சில உணவுகளுடன் சேர்த்து உண்ணக்கூடாது என்று கூறப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் பால் ஒரு முக்கிய மருந்தாக இருக்கிறது. அதனை சரியாகப் பயன்படுத்தினால் அது நல்லதொரு உணவு. ஆனால் அதை சேர்க்கக் கூடாத பொருளுடன் சேர்த்தால் நிச்சயம் உபாதைகள் ஏற்படும் எனக் கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் வரலக்ஷ்மி.
உப்பு: பாலையும் உப்பையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. உதாரணத்துக்கு காபி, டீ யுடன் சால்ட் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதனை உடனே நிறுத்திவிடுங்கள். இவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று சேராது.
மீன்: பாலும் மீனும் மிகவும் மோசமான காம்பினேஷன் என்று கூறலாம். இவ்வாறு சாப்பிட்டால் சரும அலர்ஜி ஏற்படும். அதனால் எப்போதும் பாலும், மீனும் சாப்பிடாதீர்கள்.
பாலும் வெல்லம் கூடாது..
பாலும் வெல்லமும் சேர்த்து சாப்பிடக் கூடாது. இவை இரண்டும் உணவுத் தன்மை பொறுத்த வரையில் எதிரெதிர் பண்புகள் கொண்டவையாகும். பால் குளிர்ச்சி தரக் கூடியது. வெல்லம் சூட்டை கிளப்பக் கூடியது. ஆகையால் இந்த இரண்டையும் சேர்த்து பயன்படுத்தக் கூடாது.
பாலும் சிட்ரஸ் பழங்களும்
பாலும் சிட்ரஸ் பழங்களும் கூட ஒன்றோடு ஒன்று சேர்ந்து பயன்படுத்தக் கூடியது அல்ல. சிட்ரஸ் பழங்கள் பாலை திரியச் செய்யும். அதனால் அதனை சேர்ந்து உட்கொண்டால் வயிற்றிலும் போய் அது திரிந்துவிடும். இது அசிடிட்டியை உருவாக்கும்.
பாலும் வாழைப்பழமும்..
என்னது பாலும் வாழைப்பழமும் சேர்த்து அருந்தக் கூடாதா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? காலம் காலமாக தமிழ் மரபில் பாலும் பழமும் விருந்தாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பாலும் பழமும் சேர்த்து அருந்தினால் அதுவும் அடிக்கடி பனானா மில்க்ஷேக் போன்ற பானங்களை அருந்தினால் அது வயிற்றில் அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
மற்றபடி நாம் அன்றாடம் பால் அருந்த வேண்டும். பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன. மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துக்கின்றனர். மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோக்கியம் பெருகும். தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.