அசிடிட்டி அப்படிச் சொன்னால் தான் நம்மில் பலருக்கும் புரிகிறது. அந்த அளவுக்கு அசிடிட்டி மருந்து, மாத்திரை, பவுடர் விளம்பரங்கள் மலிந்து கிடக்கின்றன. பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு கை வைத்தியம் உள்ளது. அதில் சிலவற்றை நாம் நம்பி செய்யலாம்.
சோம்பு:
சோம்பு கலந்த தண்ணீர். இது நெஞ்சு எரிச்சலை குணமாக்கும். ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் சோம்பு சேர்த்து அருந்தினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
வெல்லம்:
வெல்லத்தில் பொட்டாசியம், மெக்னீஸியம் உள்ளது. பொட்டாசியம் சத்து பிஹெச் பேலன்ஸை சீராக பாதுகாக்க உதவும். இது வயிற்றின் சுவரில் தேவையான மியூக்கஸ் மெம்ப்ரேனை உருவாக்கும். அதேபோல் மெக்னீஸியம் செரிமானத்துக்கு மிகவும் அவசியமானது. அதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும் போது ஒரு சிறிய வெல்லத் துண்டு வாயில் ஒதுக்கி மெல்ல மெல்ல அந்த சாற்றை உள்ளே இறக்குங்கள்.
கருஞ்சீரகம்:
கருஞ்சீரகம் என்பது மருத்துவ குணம் வாய்ந்தது. அதே வேளையில் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டியது. ஒரு டம்ப்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து கொத்திக்க வைத்து அருந்தலாம்.
ஓமம்:
ஊர்ப்பக்கம் பாட்டில்களில் ஓம வாட்டர் என்றே விற்கும். ஓமம் ஜீரணத்தை சீராக்கும். ஓமம் ஜீரணத்தையும், வயிறு உப்புசத்தையும் சரி செய்யும். அதனால் இது உடனே பலனளிக்கக் கூடிய கை மருந்து.
அலட்சியம் கூடாது:
நெஞ்சு எரிச்சலுக்கு கை வைத்தியம் செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக ஏற்படும் நெஞ்சு எரிச்சலை அசட்டை செய்யக் கூடாது. அண்மையில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் கேகே திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு இதய கோளாறு இருந்தது அவர் மறைவுக்குப் பின்னர்தான் தெரிந்தது. அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டு வந்ததது. அதை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அசிடிட்டி மருந்து மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இந்த அசட்டையும் அவர் மறைவுக்குக் காரணமாகிவிட்டது. அசிடிட்டி என்று அசட்டை செய்ததால் ஏற்பட்ட விளைவை சிறார் எழுத்தாளர் விழியன் இன்று தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பதிவில், "பாடகர் கேகே மாரடைப்பால் இறந்தாலும் அவர் இறப்பு இயற்கையானதாக இல்லை என்று செய்தி பரவியது. உடல்கூராய்வில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அது acidity சிக்கல் என்று அதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இருக்கார். இசை நிகழ்ச்சியில் உற்சாகத்தின் உச்சிக்கு சென்றதால் மேலும் சிக்கலாகி மாரடைப்பு வந்துள்ளதாக தெரிகின்றது.
கிட்டத்தட்ட இதே போன்ற சிக்கலையே நானும் எதிர்கொண்டேன். ஒரு நாள் காலை தோசை உண்ட பின்னர் வாந்தி வந்தது, சில நிமிடங்கள் கண்கள் இருட்டிக்கொண்டது. உடனே ஆஸ்பிட்டல் கிளம்பலாம் என்றார் வித்யா, ஆனால் சில நிமிட உறக்கத்திற்கு பின்னர் இயல்பிற்கு திரும்பிவிட்டேன். கேஸ் பிரச்சனையாக இருக்கும் என ஊகித்து அதற்காக மாத்திரைகளையும் சோடாக்களையும் அடுத்த சில நாட்களில் எடுத்துக்கொண்டேன். வெளியேவும் சென்றுவந்தேன். மீண்டும் சில நாள் கழித்து அதே போல வியர்வை கொட்டியது. ஈசிஜி எடுத்திடலாம் என்று சென்றபோதுதான் ஏற்கனவே இரண்டுமுறை அட்டாக் நடந்திருப்பது தெரிந்தது. மாரடைப்பு வந்தும் கவனிக்காததால் இதயத்தில் ஒரு ரத்தக்கட்டியும் உருவாகி இருந்தது. உடனே ஒரு மருத்துவமனையில் அட்மிடான சில நிமிடங்களிலேயே மூச்சுத்திணறல் அதிகமானது. சரியான நேரத்தில் ஆஸ்பிட்டலில் இருந்தேன். அதன்பின்னர் நீண்ட போராட்டம். ரத்தக்கட்டி இருந்ததால் ஆஞ்சியோ செய்ய முடியவில்லை. 45 நாட்கள் 1000 மில்லிலிட்டர் தண்ணீர் மட்டுமே ஒரு நாளைக்கு. மீண்டும் ஆஞ்சியோ செய்தபோது முழு ப்ளாக்ஸ். அறுவைசிகிச்சையும் செய்யமுடியாது என சிக்கலான நிலை. கடைசியில் ஒருவழியாக இதய அறுவை சிகிச்சை நடந்து நலமாக உள்ளே.
இதை பயமுறுத்தச் சொல்லவில்லை. கவனமாக இருக்க மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்.
1. நாற்பது வயதானதும் கண்டிப்பாக full body check எடுத்துக்கொள்ளவும்.
2. சுகர் பிபி இருந்தால் அவசியம் அதற்கான மருத்துவம் பார்க்கவும்.
3. பெற்றோர்களுக்கு மேலே கூறிய சிக்கல் இருப்பின் கண்டிப்பாக கூடுதல் கவனம் தேவை.
4. உடல் கொடுக்கும் எந்த சிக்னலையும் உதாசினப்படுத்த வேண்டாம்.
5. கட்டாயம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள் எந்த வயது என்றாலும்"
இவ்வாறாக அவர் பதிவிட்டுள்ளார்.