Valentines Day Ban: காதலர் தினத்தை கொண்டாடினால் சில நாடுகளில் சிறை தண்டனை கூட விதிக்கப்படுகிறது.
காதலர் தின கொண்டாட்டம்:
பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டது. காதலர்களுக்கும், காதலிப்பவர்களுக்கும் இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காதலையே ஒரு மதமாக ஏற்ற்க்கொண்டவர்களுக்கு, காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி தான் புனித நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போலவே, 2025 ஆம் ஆண்டின் காதலர் வாரமும் பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திற்காக அர்ப்பணிக்கப்படும். இறுதியாக காதலர் தினம் அந்த வாரத்தின் கடைசி நாளில் அதாவது பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும்.
ஒருவரைப் பற்றி மனதிற்குள் சில ஆசைகளை வளர்த்துக் கொள்ளும் பலர் இருக்கிறார்கள். இந்த நாளில், அவர் அந்த நபரின் முன் சென்று தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். இந்த நாளில் பல காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை கொண்டு மனங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் காதலர் தினம் ஒரு பொது பண்டிகையாகவே உருவெடுத்துள்ளது. ஆனால் உலகின் சில நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட கூட முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி செய்தால் சிறைக்கு கூட செல்ல நேரிடும் என்பது கூடுதல் தகவல்.
காதலர் தினம் தடை செய்யப்பட்ட நாடுகள்:
1. சவுதி அரேபியா
அரபு நாடுகளில் சவுதி அரேபியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்லாமிய சித்தாந்தத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்ட நாடு. நாட்டின் பெரும்பாலான சட்டங்களும் மத அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, காதலர் தினம் மேற்கத்திய நாடுகளின் பண்டிகையாகக் கருதப்படுகிறது. மேலும் சவுதி அரேபியாவில் இது இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு எதிராக கருதப்படுகிறது. அதனால்தான் இங்கு காதலர் தினத்தை யாரும் கொண்டாடுவதில்லை. ஆனால், கடந்த சில வருடங்களாக காதலர் தினத்தை சிலர் கொண்டாட தொடங்கியுள்ளனர். ஆனால் இன்றும் சவூதி அரேபியா மக்கள் காதலர் தினத்தை வெளிப்படையாகக் கொண்டாடுவது இல்லை.
2. உஸ்பெகிஸ்தான்
1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்தது உஸ்பெகிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக மாறியது. 2012 வரை, உஸ்பெகிஸ்தானில் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் அந்த நாட்டின் கல்வி அமைச்சகம் 2012 ஆம் ஆண்டு முதல் காதலர் தினத்தை கொண்டாட தடை விதித்துள்ளது. உஸ்பெகிஸ்தானின் மாவீரரும் முகலாயப் பேரரசின் நிறுவனருமான பாபரின் பிறந்த நாள் பிப்ரவரி 14 என்பதே இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. பாபரின் பிறந்தநாளைக் கொண்டாட அரசாங்கம் மக்களை ஊக்குவிக்கிறது, அதனால்தான் காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை.
3. மலேசியாவில் சிறைவாசம்
சவூதி அரேபியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பாரம்பரியமாக காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இன்னும் சில இடங்களில் மக்கள் அதை நம்புகிறார்கள். ஆனால் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்று சொல்லலாம். 2005ஆம் ஆண்டு மலேசிய அரசு ஃபத்வாவை வெளியிட்டது. இதில் காதலர் தினம் இளைஞர்களை சீரழித்து, ஒழுக்க சீர்கேட்டை நோக்கி தள்ளுவதாக கூறப்பட்டது. மலேசியாவில், இந்த நாளில், பொது இடத்தில் யாராவது ஒருவர் காதலை வெளிப்படுத்தினால் அவர் கைது செய்யப்படுவார்.
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தடை
இது தவிர, இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கூட காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், ”காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வந்தது. மேலும் இது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது. அதன் அடிப்படையில் காதலர் தினத்தை கொண்டாட முடியாது” என தடை விதித்தது. இது தவிர 2010-ம் ஆண்டு ஈரான் அரசும் காதலர் தினத்தை கொண்டாட அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது. இது மேற்கத்திய கலாச்சாரம் என்றும், முறைகேடான உறவுகளை ஊக்குவிக்கிறது என்றும் ஈரான் அரசு கூறியது. இந்த நாளில் திருமணமாகாத தம்பதிகள் நடனமாடுவதைக் கண்டால் அவர்கள் ஈரானில் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.