Dangerous Weapon: உலகின் பயங்கர நாசகார ஆயுதங்களாக குறிப்பிடப்படுபவை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்தியாவின் ராணுவ பலம்:

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வந்த போர் பதற்றம், உலகின் பல்வேறு நாடுகளின் வசமுள்ள ஆயுதங்கள் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இவற்றில் அதிகம் கவனம் ஈர்த்தது ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும். சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து தனது எல்லைகளைப் பாதுகாக்க இந்தியா இதை ராணுவமயமாக்கியுள்ளது. அதன்படி சமீபத்திய மோதலில், இந்த வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளை வானிலேயே முறியடித்தது. சுதர்சன சக்ரா என்ற பெயரால் கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து மிகவும் விவாதிக்கப்பட்ட ஆயுதம் என்பது, ஃப்ரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நவீன போர் விமானமான ரஃபேல் ஆகும்.  அதன் சக்தியை இந்தியா மே 7 இரவு பாகிஸ்தானைத் தாக்கி உலகிற்குக் காட்டியது. 

உலக நாடுகளின் ஆயுதங்கள்:

உலகெங்கிலும் உள்ள சக்திவாய்ந்த நாடுகள் இதுபோன்ற பல ஆயுதங்களைக் கொண்டுள்ளன, அவை பல நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், உலகின் இரண்டு நாடுகளும் பரந்த கடலில் சுனாமியை ஏற்படுத்தும் திறன் கொண்ட ஆயுதங்களைக் கொண்டுள்ளன. இந்த ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் கூட அவற்றின் பெயரைக் கேட்டாலே நடுங்கும். அவற்றைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். 

ரஷ்யாவின் ”பொஸைடன்”

உலகில் நவீன ஆயுதங்கள் என்ற தலைப்பிலான விவாதம் எழும்போதெல்லாம், சர்வதேச நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக ரஷ்யா இடம்பெறுகிறது. அவர்களிடம் எதிரியை மண்டியிட வைக்கும் பல சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன. இதன் காரணமாகவே இந்தியா பெரும்பாலும் ரஷ்ய ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், ரஷ்யாவிடம் கடலில் சுனாமியை ஏற்படுத்தும் திறன் கொண்ட ஒரு ஆயுதமும் உள்ளது. ஆளில்லா நீருக்கடியில் பயணிக்கும் இந்த நியூக்ளியர் டார்பொடோவின் பெயர் “பொஸைடன்” என்பதாகும்.  இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் அணுசக்தியில் இயங்குகிறது. இது கடலில் 500 அடி உயரத்திலான சுனாமியை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று ரஷ்யா தரப்பு கூறுகிறது. இது 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, இலக்கை தாக்கும் திறன் கொண்டுள்ளது.

வடகொரியாவின் ஹெயில்-5-23:

ரஷ்யாவின் வரிசையில், சுனாமி பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களைக் கொண்ட அடுத்த நாடு வட கொரியா ஆகும். ரஷ்யாவின் நண்பன், அமெரிக்காவின் எதிரி. 2024 ஆம் ஆண்டில், வட கொரியா நீருக்கடியில் அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து செல்லும் திறன் கொண்ட நீருக்கடியில் அணு ஆயுத ட்ரோனை சோதித்ததாக அறிவித்தது. இந்த ட்ரோனுக்கு வட கொரியா 'Haeil-5-23' என்று பெயரிட்டுள்ளது. ஹெயில் என்றால் சுனாமி என்று பொருள், இந்த ஆயுதம் கடலில் சுனாமியை ஏற்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வடகொரியா இந்த ஆயுதத்தை உருவாக்கியுள்ளது. இது 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, இலக்கை தாக்கும் திறன் கொண்டுள்ளது.

குறிப்பு: பொதுவாக அணுகுண்டு நீருக்கடியில் வெடித்தால் சுனாமியை உருவாக்கக்கூடும் என்ற கருத்து தற்போது வரை கோட்பாட்டளவில் உள்ளது. இருப்பினும், ஒரு அணு ஆயுத வெடிப்பால் உருவாகும் சுனாமியின் அளவு, பூகம்பம் அல்லது பெரிய எரிமலை வெடிப்பால் ஏற்படும் சுனாமியை விட மிகச் சிறியதாக இருக்கும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக உள்ளது.