Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் தொடர்பாக பொதுவாக சொல்லப்படும் கட்டுக்கதைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.
சந்திர கிரகணம் 2025
கடந்த 2022ம் ஆண்டிற்குப் பிறகான மிக நீண்ட சந்திர கிரகணம் இந்தியாவில் இன்று நள்ளிரவில் நிகழ உள்ளது. வானத்தில் காப்பர் சிவப்பு நிறத்தில் நிலா ஒளிர்ந்து கவர்ந்திழுக்க கூடிய இந்த நிகழ்வை, நாடு முழுவதும் உள்ள மக்கள் காண வாய்ப்பை பெறுவது 2018ம் ஆண்டு ஜுலை 27ம் தேதிக்குப் பிறகு முதல்முறையாகும். இது வாழ்வில் எளிமையாக கிடைத்திடாத சில அரிய அனுபவங்களை பெற்றிடுவதற்கான சிறந்த தருணமாக கருதப்படுகிறது.
82 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி தன்னை நிலைநிறுத்தும்போது, ஒரு நிழலை ஏற்படுத்தும். இதனால் முழு நிலவு மெதுவாக ஆழமான கருஞ்சிவப்பு நிறமாக மாறி, காப்பர் சிவப்பு நிற நிலவை உருவாக்குகிறது. சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மூழ்கும் இந்த வானியல் நிகழ்வு, முழுமை நிலை என்றும் அழைக்கப்படுகிறது. இது தோராயமாக 82 நிமிடங்கள் நீடிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வானம் தெளிவாக இருந்தால், இந்த தசாப்தத்தின் அற்புதமான சந்திர கிரகணம் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 85 சதவிகிதத்தினருக்கு பரவலாகத் தெரியும். கூடுதலாக, சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், விண்வெளி ஆர்வலர்கள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சந்திர கிரகணத்தை கண்டுகளிக்கலாம்.
இந்தியாவில் சந்திர கிரகணத்திற்கான நேரம்:
இரவு 8:58 (செப்டம்பர் 7): பெனும்பிரல் கிரகணம் தொடங்குகிறது. பூமியின் பெனும்பிரல் நிழல் சந்திரனின் மேற்பரப்பைத் தொடத் தொடங்கும் தருணம் இதுவாகும்.
இரவு 9:57 (செப்டம்பர் 7): பகுதி கிரகணம் தொடங்குகிறது. சந்திரன் பூமியின் நிழலுக்குள் நுழையத் தொடங்கி, படிப்படியாக சிவப்பு நிறமாக மாறும்
இரவு 11 மணி (செப்டம்பர் 7): முழு கிரகணம் தொடங்குகிறது. சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மூழ்கி, முற்றிலும் சிவப்பு நிறமாக மாறி முழு சந்திர கிரகணம் தொடங்கும்.
இரவு 11:41 (செப்டம்பர் 7): அதிகபட்ச கிரகணம். பூமியின் நிழலின் மையத்திற்கு சந்திரன் மிக அருகில் இருக்கும் தருணம் இது.
அதிகாலை 12:22 (செப்டம்பர் 8): முழு கிரகணம் முடிகிறது. பூமியின் நிழலில் இருந்து சந்திரன் நகரத் தொடங்கும்.
அதிகாலை 1:26 (செப்டம்பர் 8): பகுதி கிரகணம் முடிவடையும் நேரம்
அதிகாலை 2:25 (செப்டம்பர் 8): சந்திரன் பூமியின் பெனும்பிரல் நிழலிலிருந்து முழுமையாக வெளியேறி இருக்கும்
சந்திர கிரகண கட்டுக்கதைகள்:
1. உணவு மற்றும் சமையல்: சந்திர கிரகணத்தின் போது உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வது செரிமான பிரச்சினைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இந்த ஆபத்துகள் குறித்து அறிவியல் ரீதியான விளக்கம் எதுவும் இல்லை.
2. உடற்பயிற்சி: சந்திர கிரகணத்தின் போது உடற்பயிற்சி செய்வது விபத்துகள் அல்லது காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று மக்கள் சொல்வதை நீங்கள் கேட்கலாம். இந்தக் கோட்பாட்டிற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. பாதுகாப்பாக உடல் பயிற்சிகளைச் செய்யும் வரை, கிரகணத்தின் போது உடற்பயிற்சி செய்வதில் எந்தத் தீங்கும் இல்லை.
3. மன ஆரோக்கியம்: சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, அவை உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதிக்காது. சோகம், பதற்றம், மனநிலை மாற்றங்கள் அல்லது பகுத்தறிவற்ற நடத்தை ஆகியவை கிரகணங்களுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளன என்று பலர் நம்பினாலும், அறிவியல் இந்த இரண்டிற்கும்எந்த தொடர்பும் இல்லை எனவே கூறுகிறது
4. உண்ணாவிரதம்: தீமைகளைத் தடுக்க, சந்திர கிரகணத்தின் போது உண்ணாவிரதம் போன்ற சில சடங்குகளைப் பின்பற்றுவது ஒரு பொதுவான நடைமுறையாகும். ஆறுதல் அல்லது ஆன்மீக உறுதிப்பாட்டிற்காக இந்த பாரம்பரியத்தை நீங்கள் தொடரலாம் என்றாலும், சந்திர கிரகணங்கள் மனித வாழ்க்கையைத் தீங்கு விளைவிக்கின்றன அல்லது பாதிக்கின்றன என்பதற்கு அறிவியலில் பெரிய ஆதாரங்கள் ஏதுமில்லை.