Earths Rotation Speed: பூமியின் சுழற்சி மொத்தமாக நின்றால் என்ன நடக்கும்? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


பூமியின் சுழற்சி வேகம்:


பூமி தனது சுற்றுவட்டப்பாதையில் இருந்துகொண்டு சூரியனை சுற்றி வருவதோடு, தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பதை நம்மில் பலரும் அறிந்ததே. அதன்படி, பூமி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் ஆகும். இதனாலேயே பூமியில் ஒரு நாள் என்பது 24 மணிநேரம் ஆகும். ஆனால் எதிர்காலத்தில் நாள் 24க்கு பதிலாக 25 மணிநேரமாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பல அறிக்கைகளின்படி, பூமியின் சுழற்சியின் வேகம் குறைந்து வருகிறது. ஆனால் இது பூமியில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா? 



பூமியின் சுழற்சி வேகம்:


பூமி தனது சுற்றுவட்டப்பாதையில் முழுமையாக பயணித்து சூரியனைச் சுற்றி வருகிறது. இதற்கு 365 நாட்களை எடுத்துக் கொள்கிறது.  இதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் பூமி எந்த வேகத்தில் சுழல்கிறது என்பது குறித்து நாம் எத்தனை முறை யோசித்து இருப்போம்? ஆனால், அதற்கான பதிலை தேட் அறிந்திருக்கிறோமா? Space.com படி, பூமி சூரியனைச் சுற்றி மணிக்கு 67,100 மைல் வேகத்தில் பயணிக்கிறது.எளிமையாக குறிப்பிட்டால், பூமி சூரியனை வினாடிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.


பூமியின் சுழற்சி வேகம் குறைந்துவிட்டதா?


இப்போது பூமியின் சுழற்சி வேகம் ஆரம்பத்தில் இருந்ததை விட குறைந்துள்ளதா என்பதுதான் கேள்வி. அதற்கு பதில் ஆம் என்பதே உண்மை. பூமியின் சுழற்சியின் வேகம் மாறுகிறது, ஆனால் அது மிகவும் மெதுவாக நடக்கிறது. உண்மையில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒருநாள் என்பது தோராயமாக 22 மணி நேரம் வரை மட்டுமே நீடித்துள்ளது. ஆனால் பூமியின் வேகம் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்து வருகிறது, ஒவ்வொரு நூற்றாண்டிலும் நாட்கள் சுமார் 2 மில்லி விநாடிகள் அதிகரித்து வருகின்றன. கடல் நீரோட்டங்கள், அலைகள் மற்றும் பூமியின் மேற்பரப்பில் இழுக்கப்படும் காற்று ஆகியவற்றால் ஏற்படும் உராய்வு காரணமாக இந்த மந்தநிலை ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், புவி வெப்பமடைதல் காரணமாக, பூமியின் சுழற்சி வேகம் மேலும் துரிதப்படுத்தப்படலாம். 


பூமியின் சுழற்சி நின்றால் என்ன நடக்கும்?


எந்த வெளிப்புற சக்தியும் இல்லாமல் பூமியின் சுழற்சியை நிறுத்துவது சாத்தியமற்றது என்பதையே தற்போது வரையிலான ஆராய்ச்சி தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பூமி சுழல்வதை நிறுத்தினால், வளிமண்டலம் பூமியின் வேகத்தில் சுழன்று கொண்டே இருக்கும். அதனால் மரங்கள் மற்றும் கட்டிடங்கள் உட்பட மேற்பரப்பில் நிலையாக இல்லாத அனைத்தும் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்படும். கிரகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான சூரிய ஒளியையும், ஆறு மாதங்களுக்கு இருளையும் பெறும். ஆனால், பூமி நொடி நேரம் நின்றாலே அதன் பிறகு நிகழும் மாற்றங்களை காண மனித இனமே இருக்காது என்பதே உண்மை. காரணம், நொடிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் பூமி தனது சுழற்சியை நிறுத்தினால், அதன் மேற்பரப்பில் சுனாமி போன்ற பிரமாண்ட பேரலைகள் ஏற்படும். இதனால்,புவியில் வசிக்கும் ஒட்டுமொத்த உயிரினங்களில் 99 சதவிகிதம் அழியவே அதிக வாய்ப்புள்ளது.