Thozhi Womens Hostel : தலைநகர் சென்னையில் உழைக்கும் மகளிருக்காக அரசு நடத்தி வரும் தோழி பெண்கள் விடுதியில் தங்க, பெண்களுக்கு ரூ.300 மாதக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதில் உண்மை இல்லை என்றும் மாறுபட்ட  தகவல்கள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் உண்மை என்ன? பார்க்கலாம்.


அது என்ன ’தோழி’ விடுதி?


பெண்களின் அதிக பணிப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 9 மாவட்டங்களில், பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. தற்போது சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் தோழி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.


மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, பரங்கி மலை (புனித தாமஸ் மவுண்ட்) ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தோழி மகளிர் பணிபுரியும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த தோழி விடுதிகளில் தனி அறைகள் உள்ளன. அதேபோல இரண்டு பேர், நான்கு பேர், 6 பேருடன் பகிர்ந்து வசிக்கும் அறைகளும் உள்ளன. அடையாறு தோழி விடுதியில் ஏசி அல்லாத தனி அறைக்கு மாதம் 6,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு பேர் பகிர்ந்துகொள்ளும் அறைக்கு 5,500 ரூபாயும் 4 பேர் இருக்கும் அறைக்கு 4,500 ரூபாயும் மாதக் கட்டணம். 6 பேர் வசிக்கும் அறைக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகும். இவை அனைத்துமே அடுக்குக் கட்டில்களாக இல்லாமல், தனித்தனிக் கட்டில்களாகவே அமைக்கப்பட்டுள்ளன.  வாஷிங் மெஷின், ஏ.சி., ஆர்.ஓ. தண்ணீர் வசதி, ஃப்ரிட்ஜ், இலவச வை- ஃபை வசதி, உணவு, தொலைக்காட்சி, 24 மணிநேர பாதுகாப்பு, பார்க்கிங், எனப் என பல வசதிகள் தோழி விடுதிகளில் உள்ளன. அதேபோல அயர்னிங், கெய்சர் வசதியும் இங்கு உண்டு.


ஒருநாள் கூட தங்கிக்கொள்ளலாம்


பெண்கள், இந்த விடுதிகளில் 15 நாட்களுக்குக் குறுகிய காலமாகவும் தங்கிக் கொள்ளலாம். வாடகையோடு, திரும்பப் பெற முடியும் பாதுகாப்புக் கட்டணத்தைச் செலுத்தி, ஒரு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். இருவர் தங்கும் அறையில், கூடுதல் கட்டணம் செலுத்தி தனியாகவும் தங்கிக் கொள்ளலாம். இந்த விவரங்கள் அனைத்தும் https://www.tnwwhcl.in/ என்ற இணையதளத்தில் விவரமாக வழங்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், அரசு நடத்தி வரும் தோழி விடுதிகளில் மாதம் 300 ரூபாய் செலுத்தி பெண்கள் தங்கலாம் என்ற செய்தி அண்மைக் காலத்தில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.இந்த நிலையில் இதுகுறித்து ABP Nadu சார்பில் விசாரித்தோம்.


சமூக நலத்துறை விடுதிகள்


சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கி வரும் 21 விடுதிகளில் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் 300 ரூபாய் என்ற கட்டணம், வசூலிக்கப்படுகின்றது. இதன்படி சென்னையில் மாதம் 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் பெண்களுக்கு சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் 300 ரூபாய் மாதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் பெறும் பெண்களுக்கு, மாதம் 200 ரூபாய் மாதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தோழி விடுதிகள் 300 ரூபாய் கட்டணத்தில் இயங்கவில்லை.


உண்மை என்ன?


அரசு நடத்தும் சமூக நலத்துறை விடுதிகள் சில விதிமுறைகளுடன் குறைந்த கட்டணத்தில் இயங்கி வருகின்றன. எனினும் தோழி விடுதிகளில் 300 ரூபாய் மாதக் கட்டணம் என்பதில் உண்மை இல்லை. இதுகுறித்து ABP Nadu சார்பில் சமூக நலத்துறை இணை இயக்குநர் நந்திதாவிடம் பேசினேன். அவர் கூறும்போது, ’’சென்னையில் 300 ரூபாய் கட்டணத்தில் விடுதிகள் தற்போது இயங்கவில்லை. 


எனினும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் 200 ரூபாய் கட்டணத்தில் சமூக நலத்துறையின் உழைக்கும் மகளிர் விடுதிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 15 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் பெறும் பெண்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.