Fact Check: சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் நிர்வாகியை பெண்கள் பிடித்து தாக்கியதாக, பரவும் தகவலின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


இணையத்தில் பரவும் தகவல்:


”சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான உண்மைத்தன்மை என்னவென, வாசகர்கள் பலரும் வாட்ஸ்-அப் மூலம் அணுகி கேள்வி எழுப்பினர். அதில், ‘’ காத்து வாக்குல வந்த செய்தி :  ஹாரியானவில் சிறுமியிடம் தவறாக நடந்த காங்கிரஸ் கட்சி தலைவரை புரட்டி எடுத்த பெண்கள்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  


         இணையத்தில் வைரலான சமூக வலைதளப்பதிவின் ஸ்க்ரீன் ஷாட்


உண்மைத்தன்மை என்ன?


மேற்கண்ட வீடியோ தொடர்பாக, இணையத்தில் தேட தொடங்கினோம். அப்போது, குறிப்பிட்ட வீடியோ கடந்த 2021ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. அதன்படி, இமாச்சலப் பிரதேசம், மண்டி மாவட்டத்தின் கோட்லி தாலுகாவிற்கு உட்பட்ட சர்வால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக நிலத்தின் உரிமையாளருக்கும், மகிளா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  


அதன்படி,  Kotli Chowki காவல் நிலையத்தை தொடர்பு கொண்டோம். அப்போது பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ‘’இது பாலியல் குற்றம் காரணமாக நிகழ்ந்த மோதல் கிடையாது. சாலை விரிவாக்கப் பணி ஒன்று தொடர்பாக நடைபெற்ற மோதல். அப்போது, இரு தரப்பும் புகார் செய்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். உண்மை தெரியாமல், சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பற்றி தவறான தகவலை யாரும் பகிர வேண்டாம்’’ என்றார். 


எனவே, 2021ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடந்த சம்பவத்தை எடுத்து, ஹரியானாவில் பாலியல் குற்றம் காரணமாக நிகழ்ந்த மோதல் என்று கூறி சிலர் வதந்தியை பரப்புகின்றனர் என்பது திட்டவட்டமாக உறுதியானது.




  இமாச்சல பிரதேசத்தில் சம்பவம் தொடர்பான உணமயான செய்தி


தீர்ப்பு:


உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் தாக்கப்பட்டார் என்பது முற்றிலும் உறுதி என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம்.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Fact Crescendo என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.